தமிழக அரசின் சார்பில் பட்டயப்படிப்பு, என்ஜினீயரிங் படித்த மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம் என்றும் திருவாரூர் கலெக்டர் சாருஸ்ரீ அறிவித்துள்ளார். பயிற்சியை முடித்தால் ரூ.21 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும் என்றும் தனது அறிவிப்பில் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழக நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது.
அதன் அடிப்படையில் பட்டயப்படிப்பு மற்றும் என்ஜினீயரிங் பட்டப்படிப்பில் மெக்கானிக்கல் புரொடக்ஷன் டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் படித்து முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய தொழில்துறை சார்ந்த தானியங்கி திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் எண் முறை உற்பத்தி துறையில் திறன் மேம்பாட்டு பயிற்சி என்.டி.டி.எப். நிறுவனத்தின் மூலம் வழங்கி வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். பட்டயப்படிப்பு மற்றும் என்ஜினீயரிங் பட்டப்படிப்பில் மெக்கானிக்கல் புரொடக்சன் டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் முடித்த 18 வயது முதல் 26 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இப்பயிற்சிக்கான கால அளவு 6 மாதம் ஆகும். மேலும் தங்கி படிக்கும் வசதியும் இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் மாணவர்களுக்கு தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் ஆரம்பகால மாதாந்திர ஊதியமாக பட்டயபடிப்பு முடித்தவர்களுக்கு ரூ.16 ஆயிரம் முதல் ரூ.21 ஆயிரம் வரை வழங்கப்படும். என்ஜினீயரிங் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.21 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். மேலும் புகழ் பெற்ற தனியார் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இப்பயிற்சிக்கான கட்டணம் தாட்கோ மூலம் வழங்கப்படும்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினை சார்ந்தவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயனடையலாம். மேலும் விவரங்கள் பெற திருவாரூர்-நாகை பைபாஸ் சாலையில் அமைந்துள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் எனில், தமிழக அரசு ஆதிதிராடவிடர் நலத்துறை மூலமாக ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினத்தவர்கள் பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் தொழில் தொடங்க கடன் உதவி அளிக்கிறது. அந்த கடன்களுக்கு 50 சதவீதம் வரை மானியமும் அளிக்கிறது. உதாரணமாக 5 லட்சம் கடன் வாங்கினால் அதில் 30 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை கட்டத்தேவையில்லை. அதனை தமிழக அரசே வழங்குகிறது.
இது தொடர்பாக சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் அண்மையில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: “தாட்கோ மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளையோரின் வாழ்வாதாரத்தை உயர்த்திட உதவிடும் வகையில் தற்காலத்திற்கு ஏற்ற வகையில் திருத்தி அமைக்கப்படும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
அதன்படி, தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் வாழ்வாதார திட்டங்களான பொருளாதார மேம்பாட்டு திட்டம், இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு திட்டம், நிலம் மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களை ஒருங்கிணைத்து முதல்-அமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம் என்ற பெயரில் ரூ.40 கோடி செலவினத்தில் புதிய திட்டமாக செயல்படுத்தப்படும்.
இந்த புதிய திட்டத்தின் படி ஆதிதிராவிடர்களுக்கான தனிநபர் திட்ட தொகையில் முன்விடுப்பு மானியமாக விடுவிக்கப்படும் தொகை 30 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக உயர்த்தவும் அல்லது அதிகபட்சமாக ரூ.3½ லட்சம் இதில் எது குறைவானதோ அதை கடன் வழங்கும் வங்கிக்கு வழங்கப்பட உள்ளது. அதேபோல் பழங்குடியினருக்கு திட்ட மதிப்பீட்டில் 50 சதவீதம் அல்லது ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் இவற்றில் எது குறைவானதோ அத்தொகையை மானியமாகவும் வழங்கப்படும்.
மேலும், 6 சதவீதம் வட்டி மானியத்தை அரையாண்டிற்கு ஒருமுறை சம்பந்தப்பட்ட வங்கிகளிடம் இருந்து பெற்று, ஒத்திவைப்பு காலம் உள்பட முழுவதுமாக திரும்ப செலுத்தும் காலம் வரை வட்டி மானியம் பெறுவதற்கான தகுதிகளின் அடிப்படையில் வழங்கவும் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.” இவ்வாறு சேலம் கலெக்டர் தனது அறிவிப்பில் கூறியுள்ளார்.