You are currently viewing யார் அந்த குயிலி… குயிலி ஒரு கற்பனை கதையா?

யார் அந்த குயிலி… குயிலி ஒரு கற்பனை கதையா?

இந்திய விடுதலை வரலாற்றில் ஜான்சிராணியைப் பற்றி பேசுகிற பக்கங்கள் அதிகமாக இருக்கலாம்.. ஆனால் அவருக்கும் முன்பாக தமிழ் மண்ணில் தாய் மண்ணின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து பெரும் புரட்சியையே நடத்தியவர் வீரமங்கை வேலுநாச்சியார்..அவரது பெருமைக்குரிய தளபதியாக இருந்தவர்தான் வீரத்தாய் குயிலி…

இலங்கையில் தமிழீழம் கோரி விடுதலைப் போர் நடத்திய விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் இணைந்து போர்க்களங்களில் பங்கேற்றனர். அதற்கு முன்பாக 1750களில் மிகப் பெரிய பெண்கள் படையணியை கட்டி வீரச்சமர் புரிந்தவர் அரசியார் வேலுநாச்சி அவர்கள்…வேலுநாச்சியாரின் வளரிப் படையும் பெண்கள் படை அணியும் ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பணமாக இருந்தவை… வேலுநாச்சாரியின் வளரிப் படைக்கு தலைமை வகித்து தமிழர் வீரத்தை உலகுக்குப் பறை சாற்றியவர் வீரத்தாய் குயிலி..

இந்திய சுதந்திரத்துக்காக பாடுபட்ட வீரப்பெண்களில் தவிர்க்க முடியாத ஒரு பெயர் ஜான்சியின் ராணி லட்சுமி பாய். தமிழகத்தை பொறுத்த வரை முதன் முதலில் ஆங்கிலேயருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியவர் வீர மங்கை வேலு நாச்சியார். ஆனால் வரலாற்றில் ஜான்சி ராணிக்குக் கிடைத்த அங்கீகாரமும் புகழும் வேலு நாச்சியாருக்குக் கிடைக்கவில்லை. காரணங்களையும் காரியங்களையும் யார் அறிவார்? வேலு நாச்சியாருக்கே இந்த நிலை எனும் போது அவருக்குப் பின்னணியில் இருந்து அவருடன் எண்ணற்ற தியாகங்களைச் செய்த மற்ற பெண்களின் நிலை என்னவாக இருக்கும்? 

அநீதியைக் கண்டு எதிர்க்கும் போர்க்குணத்தை தமது குருதியிலேயே கொண்டிருந்தவள் வேலு நாச்சியார். ராமநாதபுரம் மன்னர் முத்து விஜய ரகுநாத செல்லத் துரை சேதுபதி மற்றும் அரசி முத்தாத்தாள் நாச்சியாரின் ஒரே பெண் குழந்தை வேலுநாச்சியார். செல்லமுத்து சேதுபதியின் ஒரே மகள்தான் வேலு நாச்சியார். சிறுமியாக இருக்கையிலேயே சிலம்பம், வாள் வீச்சு, வில்வித்தை, குதிரை ஏற்றம் போன்றவற்றில் தேர்ச்சி பெற்றார். போர்ப் பயிற்சியில் மட்டுமல்ல கலை கல்வியிலும் வேலு நாச்சியார் தலை சிறந்து விளங்கினார். தாய்மொழி தமிழில் மட்டுமல்லாமல் பன்மொழிப் புலமை பெற்றவர் வேலு நாச்சியார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, உருது, அரபி, பிரஞ்ச், இங்கிலிஷ், ஜெர்மன் என பத்து மொழிகளில் வல்லவராகத் திகழ்ந்தார்.

வீரமும் பேரழகும் ஒருங்கே உள்ள அந்த இளம் பெண்ணைக் கண்ட சிவகங்கை இளவரசர் கவுரிபவல்லப உடையன முத்துவடுகநாதத் தேவர் வேலு நாச்சியாரின் மீது காதல் வயப்பட்டார். அவர்களின் திருமணம் இனிதே முடிந்த போது வேலு நாச்சியாருக்கு பதினாறு வயதுதான் நிரம்பியிருந்தது. ஒரு பெண் மகவை ஈன்றெடுத்தார் வேலு நாச்சியார். அன்பு சூழ் அமைதியான ஓர் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த வேலு நாச்சியாருக்கு எண்ணற்ற பிரச்னைகளைத் தொடங்கியது 1772-ம் ஆண்டில்தான். சரித்திரம் அக்கணத்திலிருந்து அவரது சரிதத்தையும் எழுதத் தொடங்கிவிட்டது. வெள்ளையர்கள் தங்களது ஆட்சியை விரிவடையச் செய்து கொண்டிருந்த காலகட்டத்தில், சிவகங்கையை விட்டுவைக்காமல் முற்றுகையிட்டனர் .

காளையார் கோயிலில் நடந்த அப்போரில் கணவர் முத்துவடுகனாதரையும் அன்பு மகள் கௌரி நாச்சியாரையும் இழந்த வேலு நாச்சியார் மனத் துயரில் பரிதவித்தாள். அவளையும் கொல்ல வெள்ளையர்கள் சூழ்ச்சி செய்தனர். வேலுநாச்சியார் எங்கே என்று கேட்டு உடையாள் எனும் பெண்ணை அவர்கள் பிடித்து வைத்து வதைத்த போது, காட்டிக் கொடுக்க மறுத்தாள் உடையாள். அதனால், வெள்ளையரால் வெட்டப்பட்டாள் அந்தப் பெண். அவளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு, தமது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தி அஞ்சலி செலுத்தினாள் வேலு நாச்சியார். வீழ்வேனென்று நினைத்தாயோ எனும்வகையில் வெள்ளையனுக்கு எதிராக வீறு கொண்டு எழுந்தாள் வேலு நாச்சியார். முதலில் கணவரின் இறப்பினால் மனம் உடைந்த வேலு நாச்சியார் உயிர் துறக்கத் தான் எண்ணினாள். ஆனால் மணாளனைக் கொன்றவர்களைப் பழிவாங்கி, தனது அரசை மீட்க சூளுரைத்து அதற்கான வழிமுறைகளைக் கண்டடைய காடேகினாள்

தளவாய் தாண்டவராயன் பிள்ளை மற்றும் சேனாபதிகளான மருது சகோதரர்களையும் உடன் அழைத்துக் கொண்டு குறு நில மன்னர்களை ஒன்றிணைத்துப் போராடினார்.   வேலு நாச்சியார் பணிக்க, சார்பாக சுல்தான் ஹைதர் அலிக்கு தளவாய் தாண்டவராயன் பிள்ளை போர் உதவி கேட்டு கடிதம் ஒன்றை எழுதினார். ஐயாயிரம் வீரர்கள் கொண்ட காலாட்படையும் 5,000 வீரர்கள் கொண்ட குதிரைப்படையும் கேட்டிருந்தார். வேலு நாச்சியாரை நேரில் அழைத்த ஹைதர் அலி, அவரின் உருதுப் புலமையைக் கண்டு வியந்தார். வேலு நாச்சியார் கேட்டபடி படைகளைக் கொடுத்து அனுப்பினார். வேலு நாச்சியார், தாமதிக்காமல் வெள்ளையர்களை வெல்வதற்கான உத்திகளை வகுத்தார். 1780 -ம் ஆண்டு ஐந்தாம் நாள் தனது படைகளை  தானே முன்னின்று நடத்தினார்.  சேனாபதிகளான மருது சகோதரர்களின் துணையுடன் அனைத்துப் படைகளுக்குத்  தலைமை தாங்கி திண்டுக்கல்லில் இருந்து சிவகங்கையை நோக்கிப் புறப்பட்டாள் வேலு நாச்சியார். 

விஜயதசமி அன்று சிவகங்கை அரண்மனைக்குள் இருக்கும் ராஜ ராஜேஸ்வரி கோவிலுக்கு பெண்கள் பெருங்கூட்டமாகச் சென்று வழிபடுவது வழக்கம். கோவிலுக்கு வெளியே வெள்ளையரின் படை காவல் காத்துக் கொண்டிருக்கும். வேலு நாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும், ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்குள் உள்ளே இருந்த கோவிலுக்குள் புகுந்தனர். வெள்ளையர்கள் சற்றும் எதிர்பாராத ஒரு கணத்தில் அவர்கள் மீது வேலு நாச்சியாரின் படை திடீர் தாக்குதல் நடத்தியது. எதிரிப் படைகளால் உடனடியாக சுதாரிக்க முடியவில்லை. இந்தத் தாகுதலில் பெண்கள் படை பெறும் பங்கு வகித்தது. முன்னர் திட்டமிட்டபடி மாறுவேடத்தில் உட்புகுந்துச் செல்ல வியூகம் அமைத்திருந்தாள் வேலு நாச்சியார். அதன் முதல்கட்டச் செயல்பாடாக குயிலி என்ற பெண்ணை தற்கொலைப்படையாக நியமித்து அனுப்பினார்.

குயிலி தன் உடல் முழுவதும் எண்ணெய் பூசிக் கொண்டு வெள்ளையரின் ஆயுதக் கிடங்கினுள் புகுந்தாள். அங்கு அவள் தன்னை எரித்து ஆயுதங்களையும் அழித்தாள். அந்த அறையில் இருந்த அனைத்து ஆயுதங்களும் தீக்கிரையானது. வெற்றிக்குத் தேவை வீரம் மட்டுமல்ல விவேகம் என்பதை உணர்ந்து உலகிலேயே முதன்முதலாக மனித வெடிகுண்டாகச் செயல்பட ஒரு பெண்ணை அனுப்பிய மிகத் துணிவான முடிவினை எடுத்திருந்தார் வேலு நாச்சியார். தற்கொலைப் படை எனும் தனிப் பிரிவு அமைக்க இச்சம்பவம் முன் உதாரணமாக அமைந்தது.

அதிவிரைவாக கோட்டையை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த வேலு நாச்சியாரின் படையைத் தடுக்க ஆற்காட்டு நவாப் வெள்ளையர்களுடன் படை எடுத்து வந்தான். கடும் சீற்றத்துடன் வேலு நாச்சியாரும் மருது சகோதரர்களும் அப்படைகளை வென்றார்கள். தன் கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும், தளபதி பான் ஜோரையும் வேலு நாச்சியார் தோற்கடித்ததார். அதிலும் பான் ஜோர் வேலு நாச்சியாரிடம் மண்டியிட்டு உயிர் பிச்சைக் கேட்டபோது மன்னிப்பு வழங்கி தனது அரசை மீட்டு வெள்ளையர் கொடியை இறக்கி, தனது அனுமன் கொடியை பறக்கச் செய்து சிவகங்கையை மீட்டாள் வீர மங்கை வேலு நாச்சியார்.

தனக்காக உயிர் நீத்த உடையாளையும், நாட்டுக்காக உயிரை விட்ட குயிலியையும் வேலு நாச்சியார் ஒருபோதும் மறக்கவில்லை. உடையாள் நினைவாக ஒரு நடுகல்லை நட்டுவைத்த வேலு நாச்சியார் சிறப்பு வழிபாடுகள் செய்து வந்தாள். இன்றளவும் கொல்லங்குடி வெட்டுடைய காளியம்மன் கோயிலில் அந்த வழிபாடு தொடர்ந்து நடைபெறுகிறது. 1793-ம் ஆண்டு தனது பேத்தியின் மரணத்தால் வேலு நாச்சியாருக்கு மனத் துயரம் அதிகரித்தது. ஏற்கனவே மகளின் மறைவால் இதய நோய்க்கு உள்ளாகியிருந்த வேலு நாச்சியார்,  பேத்தியின் மரணத்துக்குப் பின், விருப்பாட்சி அரண்மனையில் தங்கிவிட்டார். பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட வேலு நாச்சியார், டிசம்பர் 25, 1796 அன்று இன்னுயிர் நீத்தார். வேலு நாச்சியாரின் தியாகத்தை சிறப்பிக்கும் வகையில், இந்திய அரசு 2008-ம் ஆண்டு தபால் தலை ஒன்றை வெளியிட்டது.

வரலாறு சில பக்கங்களை தீக்கிரையாக்கிவிடும். சில பக்களை திரித்து எழுதிவிடும். ஆனால் சில பக்கங்களை திருத்தி எழுதும் பொறுப்பு உண்மையில் வரலாற்றை உள்வாங்கியவர்களின் கரங்களில்தான் உள்ளது. இந்த டிஜிட்டல் இந்தியாவில் ஒவ்வொரு தமிழரும் பொறுப்புணர்ந்து நம்முடைய தொன்மத்தையும் ஆதி வேர்களையும் மீட்டெடுக்க முனைவோம். வேலு நாச்சியாரைப் போல, எமக்காக போரிட்டு உயிர் துறந்த பல்லாயிரக்கணக்கான உயிர்களின் தியாகத்திற்கு ஒரு அர்த்தம் கண்டுபிடிக்க முயல்வோம்.

வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாறு – Click Here

Click Here to Join:

Telegram Group link 

WhatsApp Group link

YouTube link

Instagram link 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments