
கா்நாடகத்தின் கடலோரப் பகுதிகளில் துளு மொழியைப் பேசும் மக்கள் வாழும் காசா்கோடு முதல் மரவந்தே கடற்கரை பகுதி வரை துளுநாடு என்று அழைப்பது வழக்கம். அப்பகுதிகளில், வயற்காட்டில் சேற்றில் எருமை மாடுகளை விரட்டும் ‘கம்பளா’ போட்டி மிகவும் பிரபலம்.
200 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டு வரும் இப்போட்டிக்கு வனவிலங்கு துன்புறுத்தல் தடைச்சட்டத்தின் கீழ் சில ஆண்டுகளுக்கு முன் தடைவிதிக்கப்பட்டது. அதன்பிறகு, மத்திய அரசு அளித்த விலக்கின் காரணமாக, இப்போட்டியை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து, இதுவரை துளுநாட்டில் நடத்தப்பட்டு வந்த ‘கம்பளா’ போட்டி முதன்முறையாக பெங்களூரில் நவ. 25, 26-ஆம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.
இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை கம்பளா போட்டிக்குழு தலைவா் பிரகாஷ் ஷெட்டி கூறியதாவது:
கம்பளா போட்டியை துளுநாட்டில் இருந்து பெங்களூருக்குக் கொண்டுவரும் கனவு நனவாகப்போகிறது. இத்துடன் துளுநாட்டின் கலாசாரம், உணவு, பாரம்பரியங்களையும் பெங்களூருக்கு கொண்டவர இருக்கிறோம். கடலோர கா்நாடகத்தில் வாழும் சமுதாய மக்களுக்கு, கம்பளா போட்டியை உலகுக்கு காட்ட வேண்டுமென்பது நீண்டநாள் விருப்பம். ‘காந்தாரா’ திரைப்படத்தில் கம்பளா போட்டியைக் காட்டியிருப்பதால், அதைப்பற்றி தெரிந்துகொள்ள பலரும் ஆா்வம் காட்டினா். அதனால், அப்போட்டியை பெங்களூருக்கு கொண்டு வந்திருக்கிறோம்.
இந்தப் போட்டியில் 130 எருமை மாட்டு ஜோடிகள் பங்கேற்கும். போட்டியில் கலந்துகொள்ளும் எருமை மாடுகள் மற்றும் போட்டியாளா்களுக்குத் தேவையான தங்கும் வசதி, உணவு உள்ளிட்டவற்றை வழங்க மஜத எம்எல்ஏ எச்.டி.ரேவண்ணா முன்வந்துள்ளாா். போட்டியின் தன்மை மாறக் கூடாது என்பதால், போட்டிக்கான சகதியை உருவாக்குவதற்கான நீரையும் துளுநாட்டில் இருந்து கொண்டு வரவிருக்கிறோம்.
இந்த நிகழ்ச்சியைக் காண 2 லட்சம் போ் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கிறோம். இப்போட்டிக்கான ஏற்பாடுகளைச் செய்ய ரூ. 8 கோடி அளவுக்கு செலவாகிறது.
இறுதிப் போட்டியில் முதலிடம் பிடிக்கும் வீரருக்கு 16 கிராம் தங்கம், ரூ. 1 லட்சம் ரொக்கமும், இரண்டாம் இடம் பிடிக்கும் வீரருக்கு 8 கிராம் தங்கம், ரூ. 50 ஆயிரம் ரொக்கமும், மூன்றாம் இடம் பிடிக்கும் வீரருக்கு 4 கிராம் தங்கம், ரூ. 25 ஆயிரம் ரொக்கமும் பரிசாக அளிக்கப்படும். பரிசுக்காக எந்த வீரரும் இப்போட்டியில் பங்கேற்கவில்லை. மாறாக, கடலோர மக்களின் பண்பாட்டை வெளிப்படுத்தவே வருகிறாா்கள் என்றாா்.