தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை’ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் முன்னாள் முதலமைச்சர் சி.என். அண்ணாதுரையின் பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி துவக்கி வைத்தார்
இந்தத் திட்டத்திற்காக தமிழ்நாடு அரசின் இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் சுமார் 7000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. வரும் ஆண்டுகளில் சுமார் 12,000 கோடி ரூபாய் அளவுக்கு இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்ய வேண்டியிருக்கும்.
தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் மக்கள் நலத் திட்டங்களிலேயே பொது விநியோகத் திட்டத்திற்கு அடுத்தபடியாக மிகப் பெரிய நலத் திட்டமாக இந்தத் திட்டமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் ஒரு கோடியே ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் குடும்பத் தலைவிகள் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைவார்கள் என தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் பொதுவாக நலத் திட்டங்கள் எல்லாத் தரப்பினருக்கும் வழங்கப்படும். இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரை, சில வரையறைகளை தமிழ்நாடு அரசு விதித்திருக்கிறது.
லோக்சபா தேர்தல்
லோக்சபா தேர்தலை முன்னிட்டு மகளிர் உரிமைத்தொகையை உயர்த்த ஆளும் திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. ரூ. 1000க்கு பதிலாக ரூ.1500 கொடுக்கப்படும் என்ற வாக்குறுதியை கொடுக்க ஆளும் திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் கடந்த ஜனவரி மாதம் மேலும் சில பயனாளிகளுக்கு பணம் அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்தான் இந்த திட்டத்தில் மீண்டும் சேர 11.8 லட்சம் பேர் மறு விண்ணப்பம் கொடுத்துள்ளனர்.
அக்டோபர் இறுதிவரை இவர்கள் கொடுத்தனர். இப்போது 1.7 கோடி பேருக்கு இந்த பணம் தற்போது கொடுக்கப்பட்டு வருகிறது.
நீட்டிப்பு:
இந்த நிலையில்தான் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மறுவாழ்வு முகாம் பெண்களுக்கும் விரிவுபடுத்தபட்டுள்ளது.
அதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது. 105 மறுவாழ்வு முகாம்களை சேர்ந்தவர்களுக்கு இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் 19487 குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தபட்டுள்ளது.
ஏற்கனவே முகாமில் உள்ள குடும்பத் தலைவருக்கு ரூ.1500, ஏனைய நபர்களுக்கு ரூ.1000, குழந்தைகளுக்கு ரூ.750 மாதம்தோறும் வழங்கபட்டு வருகிறது.
அதில் கூடுதலாக இப்போது இந்த தொகையும் வழங்கப்படுகிறது.