சந்திரயான் 3 திட்டத்தின் உந்து விசை கலன் நிலவின் சுற்று வட்டபாதையில் இருந்து வெற்றிகரமாக மீண்டும் பூமியின் சுற்றுவட்டபாதைக்கு திரும்பியது. இதன்மூலம் அடுத்த ஓராண்டு வரை உந்து விசை கலன் பூமியின் சுற்றுவட்டபாதையில் செயல்பாட்டில் இருக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதற்கிடையே தான் இந்த திட்டத்தின் வெற்றி ஏன் முக்கியம் என்பது பற்றிய அசத்தலான தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) சார்பில் சந்திரயான் -3 திட்டம் வெற்றி பெற்றது. சந்திரயான்-3யின் விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி சாப்ட் லேண்டிங் முறையில் தரையிறங்கியது.
அதன்பிறகு லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியேறி ஆய்வை தொடங்கியது. இதன்மூலம் நிலவில் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியா தரையிறங்கிய 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. அதோடு நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெயரையும் இந்தியா பெற்றது.
அதோடு ஆக்சிஜன் உள்பட 8 தனிமங்களை ரோவர் கண்டறிந்தது. மேலும் நிலவில் ஏற்படும் அதிர்வுகள் பதிவு செய்யப்பட்டது. இதுமட்டுமின்றி நிலவின் மேற்பரப்பை பல்வேறு கோணங்களில் ரோவர் தனது கேமரா மூலம் படமெடுத்து விக்ரம் லேண்டர் மூலம் இஸ்ரோவுக்கு அனுப்பி வைத்தது. 10 நாட்களுக்கு மேல் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆய்வு செய்தது.
இதையடுத்து நிலவின் தென்துருவத்தில் சூரியஒளி மறைந்தது. இதையடுத்து லேண்டர், ரோவர் ஆகியவை உறக்க நிலைக்கு சென்றது. அதன்பிறகு மீண்டும் 14 நாளுக்கு பிறகு சூரியஒளி வந்தது. அப்போது விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகியவற்றை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர இஸ்ரோ முயன்றது. ஆனால் விக்ரம் லேண்டரில் இருந்து சிக்னல் வரவில்லை.
இந்நிலையில் தான் நிலவின் சுற்றுவட்டபாதையில் வலம் வந்த உந்து விசை கலன் (Propulsion Module) வெற்றிகரமாக பூமியின் சுற்றுவட்டபாதைக்கு மீண்டும் திரும்பி உள்ளது. இதனை வெற்றிகரமாக இஸ்ரோ செய்து முடித்துள்ளது. சந்திரயான்-3 திட்டத்தை செயல்படுத்தும்போதே மீண்டும் உந்து விசை கலனை நிலவின் சுற்றுப்பாதையில் இருந்து பூமியின் சுற்றுவட்டபாதைக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.
எதிர்காலத்தில் நிலவுக்கு மனிதர்களை இந்தியா அனுப்ப திட்டமிட்டுள்ளது. இத்தகைய சூழலில் நிலவுக்கு செல்லும் மனிதர்களை பூமிக்கு மீண்டும் கொண்டு வரும் செயல்பாடுகளின் சோதனை முயற்சியாக இதனை நிகழ்த்த இஸ்ரோ திட்டமிட்டு இருந்தது. தற்போது அதனை வெற்றிகரமாக நிகழ்த்தி இஸ்ரோ சாதித்துள்ளது. அதோடு நிலவில் தரையிறங்கும் விண்கலம் மற்றும் நிலவின் சுற்றுவட்டபாதைகளில் வலம் வரும் ஆய்வுக்கலன்கள் தங்களின் ஆயுட்காலம் முடிந்த பிறகு நிலவிலேயே குப்பையாக சேரும் நிலை உள்ளது.
சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், ரோவர் ஆகியவை தற்போது நிலவின் மேற்பரப்பில் செயல்படாமல் உள்ளன. இதுபோல் செயல்படாத மற்றும் நிலவில் விழுந்து நொறுங்கிய ரஷ்யா, அமெரிக்காவின் விண்கலங்களின் பாகங்கள் நிலவின் மேற்பரப்பில் குப்பைகளாக சேர்ந்துள்ளன. இதுபோல் நிலவில் குப்பைகள் சேருவதை தடுக்கவும் இதுபோன்ற திட்டம் என்பது கைக்கொடுக்கும். இதனால் இது இந்திய விண்வெளி துறையில் மிகவும் முக்கியமான வெற்றியாக பார்க்கப்படுகிறது
Click Here to Join: