தேசிய அளவில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான அர்ஜுன விருதுக்கு கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தேர்வாகியுள்ளார்.
சமீபத்தில் நடந்த கிரிக்கெட் உலகக்கோப்பைத் தொடரில், இந்திய அணியின் நட்சத்திர வீரராக ஜொலித்தவர் 33 வயதான முகமது ஷமி. உலகக்கோப்பைத் தொடரில் மொத்தம் 7 போட்டிகளில் 24 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதன்முலம், உலகக்கோப்பைத் தொடரில் அதிகபட்ச விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்திய வீரர் என்ற முன்னாள் வீரர் ஜகீர் கானின் சாதனையையும் முகமது ஷமி முறியடித்துள்ளார். மேலும், இதுவரை நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடர்களில், 4 முறை 5 விக்கெட்டுகள் மற்றும் அதற்கும் அதிகமாக கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் ஷமி தன்வசப்படுத்தியுள்ளார்.
மேலும், செஸ் விளையாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் தமிழக வீராங்கனையான வைஷாலிக்கும் 2023 ஆம் ஆண்டிற்கான அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவின் சகோதரி ஆவார்.
சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சாரியார் விருது தமிழகத்தைச் சேர்ந்த செஸ் பயிற்சியாளர் ஆர்பி ரமேஷ் உள்பட 5 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது