2015ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முத்ரா கடன் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் கீழ், கிராமப்புறம் மற்றம் நகர்புறங்களில் தொழில் தொடங்குபவர்களுக்கு அதிக கெடுபிடிகள் எதுவும் காட்டாமல் ரூ.10 லட்சம் வரை கடன் அளிக்கப்படுகிறது. எவ்வித அடமானமும் இன்றி இந்த கடன் வழங்கப்படுவது தான் இந்த திட்டத்தில் முக்கியமான சிறப்பமசம்.
ஒரு சிறிய நிறுவனத்திற்கான சாத்தியமான வணிக திட்டத்தை கொண்ட தகுதியான நபர்கள் இந்த திட்டத்தின் கீழ் கடன்களை பெற முடியும். முத்ரா ஒரு மறுநிதியளிப்பு நிறுவனம் என்பதால் அது நேரடியாக கடன் வழங்காது. அதே நேரத்தில் வங்கிகள், பிற கடனளிப்பு நிறுவனங்கள் மூலம் கடன் வழங்க உதவுகிறது. சுருக்கமாக சொன்னால் வங்கிகள் சிறு தொழில்களுக்கு கடன் அளிக்கின்றன, அதற்கான நிதியை வங்கிகளுக்கு முத்ரா திட்டம் நிதியளிக்கிறது.
முத்ரா கடன்களின் வகைகள்
முத்ரா திட்டத்தின்கீழ், தொழில்முனைவோருக்கு 3 விதமான கடன்கள் வழங்கப்படுகிறது.
1.ஷிஷு – ரூ.50,000 வரை கடன் பெறலாம்.
2.கிஷோர் – ரூ.50,000க்கு மேல் மற்றும் ரூ.5 லட்சம் வரை கடன் கிடைக்கும்.
3.தருண் – ரூ.5 லட்சத்துக்கு மேல் மற்றும் ரூ.10 லட்சம் வரையிலான கடன்களை பெறலாம்.
ஏற்கனவே இருக்கும் சிறு வணிகங்கள் தங்கள் விரிவாக்க முயற்சிகளை எளிதாக்குவதற்கு நியாயமான வட்டி விகிதத்தில் கடன் வசதிகளை பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
யாரெல்லாம் கடன் வாங்கலாம்?
சிறு தயாரிப்பு ஆலைகள், சேவை வழங்குபவர்கள், கடைக்காரர்கள், காய்கறி அல்லது பழ வியாபாரிகள், உணவகங்கள், பழுது பார்க்கும் கடைகள், எந்திரம் இயக்குபவர்கள், கைவினைஞர்கள், உணவு பதப்படுத்துபவர்கள் மற்றும் இது போன்ற நிறுவனங்களை நடத்துபவர்கள் முத்ரா திட்டத்தில் கடன் பெறலாம்.
இந்த வணிகங்கள் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில அமைந்திருக்க வேண்டும் என்பது முக்கியம். இந்த கடன்கள் உற்பத்தி, வர்த்தகம், சேவைகள் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில் வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளுக்கு கிடைக்கும்.
கடன் விண்ணப்பம் செய்பவருக்கான தகுதிகள்
விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
முந்தைய கடனை திருப்பி செலுத்தாதற்கான எந்த அறிக்கையும் விண்ணப்பதாரருடன் தொடர்புடையதாக இருக்கக்கூடாது.
விண்ணப்பம் செய்பவரின் வணிகம் குறைந்தபட்சம் 3 ஆண்டுகளாவது நடந்து கொண்டு இருக்க வேண்டும். 24 முதல் 70 வரையிலான தொழில்முனைவோர் மட்டுமே கடனுக்கு விண்ணப்பிக்க முடியும்.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
ஸ்டெப் 1: www.udyamimitra.in என்ற வலைதளத்துக்கு செல்ல வேண்டும்.
ஸ்டெப் 2: முகப்பு திரையில் ‘Apply Now’என்பதை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: New Entrepreneur (புதிய தொழில் முனைவோர்) Existing Entrepreneur (தொழில்முனைவோர்), ‘Self-Employed (சுய தொழில் செய்பவர்) ஆகியவற்றில் ஒன்றை தேர்வு செய்யவும்.
ஸ்டெப் 4: புதிய பதிவுகளுக்கு, விண்ணப்பதாரரின் பெயர், இமெயில் அட்ரஸ் மற்றும் மொபைல் எண் போன்றவற்றை கொடுக்க வேண்டும்.
ஸ்டெப் 5: OTP உருவாக்கி பதிவு செயல் முறையை நிறைவு செய்ய வேண்டும்.