இந்தியன் வங்கியில் வேலை
பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் நாடு முழுவதும் 1500 தொழில் பழகுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வங்கிப் பணியில் சேர வேண்டும் என விரும்புகிறவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு வங்கி தொழில் பழகுநர் இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
பணியிடம் இந்த 1500 பணியிடங்களில் தமிழ்நாட்டில் மட்டும் 277 இடங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த தொழில் பழகுநர் பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள் என்ன, பயிற்சிக் காலம், உதவித்தொகை மற்றும் இதர விவரங்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.
பணி விபரம்: நாடு முழுவதும் 1500 தொழில் பழகுநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் தமிழகத்தில் 277 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. இதில் எஸ்சி பிரிவினருக்கு 52, எஸ்டி பிரிவினருக்கு 2, ஓபிசி பிரிவினருக்கு 74, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 27, பொதுப்பிரிவினருக்கு 122, மாற்றுத்திறனாளிகளுக்கு 11 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொழில் பழகுநர் பணிக்குத் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 1 வருடக் காலத்திற்கு வங்கிப் பணிக்கான பயிற்சி உதவித்தொகையுடன் வழங்கப்படும்.தொடர்புடைய செய்திகள்
வயது வரம்பு: இந்த தொழில் பழகுநர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.07.2024 ஆம் தேதி படி 20 வயது முதல் அதிகபட்சம் 28 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இதில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வரையும் கூடுதலாகத் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்குக் கூடுதலாக 10 ஆண்டுகள் வரை தளர்வு அளிக்கப்படுவதாகவும், கணவரை இழந்த மற்றும் பிரிந்த பெண்களுக்கு 35 வயது முதல் 40 வயது வரை வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி: இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி படி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
பயிற்சி மற்றும் உதவித் தொகை: இந்த தொழில் பழகுநர் பணிக்குத் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 1 வருடத்திற்கு உதவித் தொகையுடன் பயிற்சி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ/ நகர் பகுதி கிளைகளில் பயிற்சி பெறுபவர்களுக்கு ரூ.15,000 மாத உதவித்தொகையாகவும், புறநகர் மற்றும் கிராமப் பகுதி கிளைகளில் பயிற்சி பெறுபவர்களுக்கு ரூ.12,000 மாத உதவித்தொகையாகவும் கொடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை: இந்த தொழில் பழகுநர் பணிக்கு ஆன்லைன் முறையில் 100 மதிப்பெண்ணுக்குத் தேர்வு நடைபெறும். பின்னர் உள்ளூர் மொழிக்கான தேர்வும் நடத்தப்பட்டு தொழில் பழகுநர் பணிக்குத் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தியன் வங்கியின் தொழில் பழகுநர் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் முதலில் https://nats.education.gov.in/ என்ற வலைத்தளப் பக்கத்தில் ஆன்லைன் வாயிலாகப் பதிவு செய்ய வேண்டும். தொடர்ந்து, இந்தியன் வங்கியின் https://www.indianbank.in/ என்ற இணையத்தளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் ஆன்லைன் வழியாக 31.07.2024 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.