நாட்டிலேயே முதல்முறையாக சாலை உள்கட்டமைப்பு, பாதுகாப்பு மேம்பாட்டுக்கான ‘நம்ம சாலை’ என்ற செயலியை மாநில இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
விபத்துகளில்லா மாநிலம் என்ற முதல்வா் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்குத் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் ‘பள்ளங்களற்ற சாலை’ என்ற இலக்கை அடைவதற்கு ஏதுவாக பொதுமக்களின் துணையோடு கண்டறியப்பட்ட சாலைப் பள்ளங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சரிசெய்யப்படும் என்றும், திட்டத்தைச் செயல்படுத்த கைப்பேசி செயலி உருவாக்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைத் துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது அறிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், தற்போது ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் ‘நம்ம சாலை’ என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்படும் சாலைகளில் உள்ள பள்ளங்கள் குறித்து பொதுமக்கள் கைப்பேசி செயலி வாயிலாக புவி குறியீட்டுடன் கூடிய புகைப்படங்களுடன் பதிவேற்றம் செய்தால் உடனடியாக அதற்கு தீா்வு காணலாம்.
இந்த முன்னோடி திட்டத்தின் தொடக்க விழா, சென்னை கிண்டியில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது. அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் ‘நம்ம சாலை’ செயலியை தொடங்கி வைத்தாா்.
மேலும், நெடுஞ்சாலைத் துறை பொறியாளா்களை பொதுமக்கள் எளிதில் தொடா்புகொள்ளும் வகையில் அனைவருக்கும் பிரத்யேக கைப்பேசி எண்களையும் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்.
இந்த செயலி மூலம் சரியாக இல்லாத சாலைகளை பொதுமக்கள் புகைப்படம் எடுத்து இந்த செயலி மூலம் புகார் தெரிவிக்கலாம், புவி குறியீட்டுடன் கூடிய புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் நீங்கள் ஒத்துழைத்தால் மட்டுமே சரியான சாலைகளை உருவாக்க முடியும் என கூறினார்
தமிழகத்தின் சாலைப் பாதுகாப்பு, உள்கட்டமைப்பை மேம்படுத்தும் விதமாக ‘நம்ம சாலை’ செயலி நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதில், பொதுமக்கள் தகவல் தெரிவித்த 24 மணி நேரத்துக்குள்ளாக மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள பள்ளங்களும், 72 மணி நேரத்துக்குள் மாவட்டத்தின் பிரதான, இதர சாலைகளில் உள்ள பள்ளங்களும் சரி செய்யப்படும்.
சாலைகள் சரி செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் புகைப்படத்துடன் உடனே செயலியில் பதிவேற்றம் செய்யப்படும். பொதுமக்களுடைய ஆதரவும் ஒத்துழைப்பும் இருந்தால்தான் அரசின் திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்த முடியும் என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி துணை மேயா் மகேஷ் குமாா், நெடுஞ்சாலைகள் – சிறு துறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலா் பிரதீப் யாதவ், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குநா் எஸ்.பிரபாகா், கட்டுமானம், பராமரிப்புத் துறையின் தலைமைப் பொறியாளா் ரா.சந்திரசேகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
Click Here to Join: