தமிழகத்தில் படித்த இளைஞர், தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் விதத்தில், அனைவருக்கும் ‘இ- சேவை மையம்’ திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது. தமிழகத்தில் இ- சேவை மையங்கள் இல்லாத கிராம, நகர்ப்புறங்களில், படித்த இளைஞர்கர் தொழில் முனைவோர் அம்மையத்தை துவக்கிக் கொள்ளலாம்.
ஒவ்வொரு வார்டிலும் தலா ஒரு இ- சேவை மையம்’ துவக்க அரசு திட்டமிட்டுள்ளது. மாநில அளவில் இந்த மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, மக்களுக்கு, ‘ஆன்லைன்’ மூலம் பல்வேறு சேவைகளை செய்ய
உள்ளனர்.
மின் ஆளுமை முகமை, அரசு கேபிள் டிவி நிறுவனம், தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள், மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், மீன்வளத்துறை, கிராம தொழில் முனைவோர் மூலம் இச்சேவைகளை மக்களின் இருப்பிடத்திலேயே கொண்டு சேர்க்கும் நோக்கில், இந்த மையங்கள் திறக்கப்பட உள்ளன.
இ – சேவை மையங்களை துவக்க விரும்புவோர் ஜூன், 30 இரவு, 8:00 மணிக்குள் http://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். கிராமத்தில் துவக்க 3000 ரூபாய், நகரில் துவக்க 6,000 ரூபாய்க்கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். மையத்திற்கான USER ID, Password விண்ணப்பித்த மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் மூலம் வழங்கப்படும்
புதிதாக துவங்கும் இ -சேவை மையங்களில், கம்ப்யூட்டர், பிரின்டர், ஸ்கேனர், பயோமெட்ரிக் உள்ளிட்ட பொருட்களை வைத்திருக்க வேண்டும். பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். கம்ப்யூட்டர் இயக்குவதில் நல்ல அறிவு, தமிழ், ஆங்கில மொழி சரளமாக பேச, எழுத தெரிய வேண்டும். அரசு நிர்ணயித்த சேவை கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். தடையற்ற இணைய வசதி பெற்றிருக்க வேண்டும். எட்டு மணி நேரம் செயல்பட வேண்டும் என, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை தெரிவித்துள்ளது