
‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தின் படி மாவட்ட கலெக்டர்கள் இன்று காலை 9 மணி முதல் மறு நாள் காலை 9 மணி வரை ஏதோவது ஒரு கிராமத்தில் தங்குகிறார்கள்.
அவர்களிடம் மக்கள் குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, அரசின் சேவைகள் மற்றும் திட்டங்கள் மக்களை எளிதாக சென்றடையவும், இவை முறையாக மக்களுக்கு சென்றடைகிறதா? என்பதை உறுதி செய்ய ‘மக்களுடன் முதல்வர்’, ‘களத்தில் முதல்வர்’ உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.
அங்கு பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை பெற்று இந்த மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படுகிறது
அதேபோல் களத்தில் முதல்வர் திட்டம் என்ற திட்டமும் தமிழகத்தில் அரசு அறிவித்துள்ள திட்டங்கள் மக்களை சரியாக சென்றடைகிறதா? என்பதை அறிய செயல்படுத்தப்படுகிறது.
இதன்படி களத்திற்கு நேரடியாக சென்று ஆய்வில் ஈடுபட்டு அரசு எந்திரத்தை முடுக்கி விட்டு, கள அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டத்தையும் நடத்தி உரிய அறிவுரைகளை வழங்குவதற்காக கொண்டு வர முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்ததை செயல்படுத்தினார்.
இதன்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு உரிய அறிவுரைகளை வழங்கி வருகிறார்கள்.
அடுத்ததாக ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்தார்.

அந்த திட்டம் இன்று நடைமுறைக்கு வருகிறது.. முதல்வர் ஸ்டாலின் இதுபற்றி கூறும் போது, மக்களையும், அரசையும் இணைக்கும் பாலமாக இருந்து வரும் மாவட்ட ஆட்சியர்கள், ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் கிராமத்தில் தங்கியிருந்து கள ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்து.
அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி சென்றடைவதை உறுதி செய்வர் என்றார்.
அதன்படி, ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டம் சென்னை மாவட்டம் நீங்கலாக பிற மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) நடைமுறைக்கு வருகிறது
ஒவ்வொரு மாதமும் 4-வது புதன்கிழமை மாவட்ட கலெக்டர்கள் ஏதாவது ஒரு கிராமத்தை தேர்வு செய்து நேரடியாக அந்த கிராமத்துக்கு சென்று 24 மணி நேரம் அங்கு தங்கியிருந்து பல்வேறு அரசு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்வார்கள்.
கள ஆய்வின் போது பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில் கலெக்டர்கள் மேம்பட்ட சேவைகள் வழங்குதல், திட்டங்களை விரைவுபடுத்துதல் தொடர்பாக உரிய தீர்வு காண்பார்கள்.
மேலும், அன்றைய தினம் கலெக்டர்கள் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்று அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள்.
இந்த திட்டத்தின்படி கலெக்டர்கள் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை கிராமத்தில் தங்கியிருப்பார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த திட்டம் இன்று நடைமுறைக்கு வருவதால் சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் உள்ள ஏதாவது ஒரு கிராமத்தில் கலெக்டர்கள் தங்கியிருந்து மக்களின் குறைகளை கேட்க போகிறார்கள்.
இந்த திட்டத்தை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.