வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் கொள்கை சீர்திருத்தங்கள் காரணமாக, முதலீட்டாளர்களின் தேர்வாக இந்திய பங்கு சந்தை மாறி வருவதை இந்த முன்னேற்றம் வெளிப்படுத்துகிறது.
இந்திய பங்கு சந்தை (Indian stock market) முதல் முறையாக ஹாங்காங்கை முந்தி புதியதொரு மைல்கல்லை எட்டி இருக்கிறது.
கடந்த ஜனவரி 22 அன்று சந்தை மூலதனத்தின் (market capitalization) அடிப்படையில் நம்முடைய நாடானது, ஹாங்காங் நாட்டை பின்னுக்குத் தள்ளி உலகின் நான்காவது பெரிய பங்கு சந்தையாக மாறியது.
வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் கொள்கை சீர்திருத்தங்கள் காரணமாக, முதலீட்டாளர்களின் தேர்வாக இந்திய பங்கு சந்தை மாறி வருவதை இந்த முன்னேற்றம் வெளிப்படுத்துகிறது.
ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, ஜனவரி 22 திங்கட்கிழமை நாளின் முடிவில் இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட பங்குகளின் கூட்டு மதிப்பு அதாவது இந்தியாவின் சந்தை மூலதனம் (market cap), 4.33 டிரில்லியன் டாலரை எட்டியது.
அதே சமயம் இதே நேரத்தில் ஹாங்காங் நாட்டின் பங்குச் சந்தையின் மொத்த சந்தை மதிப்பு 4.29 டிரில்லியன் டாலராக மட்டுமே இருந்தது.
இதன் மூலம் சர்வதேச அளவில் நான்காவது பெரிய பங்குச் சந்தையாக இந்தியா மாறி இருக்கிறது. மேலும் இந்திய பங்குச்சந்தை முதல் முறையாக ஹாங்காங்கை வீழ்த்தியது.
இதனிடையே இந்தியாவின் பங்குச் சந்தை முதன்முறையாக கடந்த டிசம்பர் 5 அன்று $4 டிரில்லியனைத் தாண்டியது, இதில் கிட்டத்தட்ட பாதி கடந்த நான்கு ஆண்டுகளில் வந்ததாகும்.
வேகமாக வளர்ந்து வரும் சில்லறை முதலீட்டாளர் தளம் (retail investor base) மற்றும் வலுவான கார்ப்பரேட் வருமானம் காரணமாக, இந்தியாவில் பங்கு சந்தை தொடர்ந்து வேகமாக வளர்ந்து வருகிறது.
தற்போது அமெரிக்கா $50.86 டிரில்லியன் டாலர் மதிப்புடன் உலகின் மிக பெரிய பங்கு சந்தையாக உள்ளது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் $8.44 டிரில்லியன் மதிப்புடன் சீனா மற்றும் $6.36 டிரில்லியன் மதிப்புடன் ஜப்பான் நாடுகள் உள்ளன.
முதலீட்டாளர்கள் அதிகரிப்பு மற்றும் உள்நாட்டு பங்கேற்பு காரணமாக கடந்த 2023 ஆம் ஆண்டில் இந்தியப் பங்குகள் புதிய உச்சத்தை எட்டின.
ஒருபக்கம் இந்திய பங்குகள் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் மறுபுறம், சீனாவின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் புதுமையான நிறுவனங்கள் அமைந்துள்ள ஹாங்காங்கின் பங்கு சந்தைகளில் சரிவு காணப்படுகிறது.
சீன பொருளாதாரச் சரிவு உள்ளிட்ட சில காரணங்களால் ஹாங்காங் சந்தைகள் வீழ்ச்சியடைந்து வருகின்றன. துவக்கத்தில் தொற்றுக்கு எதிரான கடும் நடவடிக்கைகளுக்குப் பிறகு சீனாவின் பொருளாதாரம் மீண்டு வரும் என்று உலகளாவிய முதலீட்டாளர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் 2024-ல் எல்லைகள் முழுமையாக திறக்கப்பட்ட போதும் கூட எதிர்பார்த்தப்படி மக்கள் செலவுகளை அதிகரிக்காமல் குறைத்து கொண்டுள்ளனர்.
மக்களின் இந்த தயக்கம், பொருளாதார மந்தம் மற்றும் சீனாவின் சொத்து நெருக்கடி ஆகியவை காரணமாகவும் ஹாங்காங் பங்குசந்தை வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய மத்திய வங்கிகளால் எதிர்பார்க்கப்படும் வட்டி விகிதக் குறைப்புக்கள் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்க கூடும் என்று ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.
இந்தியாவில் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் அறிவிப்பையும் முதலீட்டாளர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
கடந்த 2023 ஆம் ஆண்டில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டும் முறையே 18.8% மற்றும் 20% முன்னேறின.
அதேநேரம் BSE MidCap மற்றும் ஸ்மால்கேப் முறையே 45.5% மற்றும் 47.5% அதிகரித்தன. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 101%, பஜாஜ் ஆட்டோ 88%, என்டிபிசி 87%, எல் அண்ட் டி 69%, கோல் இந்தியா 67%-மும் உயர்ந்தது.
ஹாங்காங்கின் Heng Seng தொடர்ந்து நான்காவது ஆண்டாக சரிவை சந்தித்தது, அதே நேரத்தில் ஷாங்காய் பங்குச் சந்தை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நஷ்டத்தை கண்டது.
இதற்கு நேர்மாறாக இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து 8 ஆண்டுகளாக வலுவடைந்து கொண்டே வருகின்றன.