தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய கேரளப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் 26 ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 27 ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் நிலவக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் இரவு முதல் லேசான மழை தொடர்ந்து பெய்து வருகிறது. கேரள எல்லை பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கன்னியகுமாரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, விருதுநகர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் தேனி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மற்ற மாவட்டங்களுக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.