முத்துராமலிங்க தேவரின் குருபூஜையையொட்டி பிரமதர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தமிழ் மொழியில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில் முத்துராமலிங்க தேவரின் கொள்கைகள் காலத்தால் அழியாமல் எதிர்கால தலைமுறையினருக்கான உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக திகழும் என புகழ்ந்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30 ஆம் தேதி தேவர் ஜெயந்தி குருபூஜை என்பது விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வேளையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பசும்பொன்னுக்கு சென்று முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவில் பங்கேற்று மரியாதை செய்வார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டு ஆண்டுக்கான முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா நேற்று முன்தினம் தொடங்கி நடந்தது. அக்டோபர் 28ம் தேதி ஆன்மீக விழாவும், 29ஆம் தேதி அரசியல் விழாவும், 30ம் தேதி குருபூஜை விழாவும் நடைபெற்றன. அக்டோபர் 30ம் தேதியான இன்றைய தினம் முத்துராமலிங்கத் தேவரின் 116ஆவது ஜெயந்தி விழா, 61வது குருபூஜை விழா நடைபெற்றது.
இதையடுத்து இன்று பசும்பொன்னுக்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் சென்று முத்துராமலிங்க தேவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். குருபூஜை விழா அமைதியாக நடந்து முடிந்தது. குருபூஜை விழாவையொட்டி ராமநாதபுரம் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி முத்துராமலிங்க தேவரின் குருபூஜையையொட்டி தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: ‛‛மதிப்பிற்குரிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெருமகனாரின் புனித குருபூஜையை முன்னிட்டு அவருக்கு நமது அஞ்சலியை செலுத்துகிறோம்.
சமூக மேம்பாட்டில் ஆழமாக வேரூன்றி இருந்த அவரது அரும் பணிகள், விவசாயிகளின் செழிப்பு, வறுமை ஒழிப்பு மற்றும் ஒற்றுமையை வலியுறுத்திய அவரது ஆன்மீகப் பாதை, தேசத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஒளியேற்றுகிறது. காலத்தால் அழியாத அவரது கொள்கைகள் எதிர்கால தலைமுறையினருக்கான உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக திகழும்” என தெரிவித்துள்ளார்.
Click Here to Join: