
ஊரகப்பகுதிகளில் உள்ள நலிவடைந்த ஓர் விவசாயி, சாகுபடிக்காக செலவு செய்வதற்கென ஒரு லட்சம் ரூபாய் அவசர கடனுக்காக பிச்சை எடுக்க வேண்டிய பரிதாபத்திற்குரிய சூழல் நிலவுகிறது.
ஆனால், மூன்று லட்சம் ரூபாய் வரை விவசாயிகள் கடன் பெறும் இந்திய அரசு திட்டம் குறித்து எத்தனை பேர் அறிவார்கள்?
ஆமாம்… இந்திய அரசின் கிசான் கிரெடிட் கார்டு (கேசிசி) மூலம் விவசாயிகள் மூன்று லட்சம் ரூபாய் வரை கடன் பெற முடியும்.
கிசான் கிரெடிட் கார்டு என்பது என்ன, அதனை பெறுவது எப்படி? எப்படி அதனை பயன்படுத்துவது? கடன் பெறுவதற்கான வழிமுறைகள் என்னென்ன? கடனுக்கான வட்டி எவ்வளவு? கடனை செலுத்துவது எப்படி?
கிசான் கிரெடிட் கார்டு என்றால் என்ன?
சாகுபடிக்கு முன்பும், அதற்கு பிந்தைய செலவுகளுக்காகவும் குறைந்த வட்டி விகிதத்தில் விவசாயிகளுக்கு கடன் வழங்குவதற்காக 1998ம் ஆண்டில் இந்திய அரசால் கிசான் கிரெடிட் கார்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
வேளாண்மைக்கும் ஊரக வளர்ச்சிக்குமான தேசிய வங்கியான நபார்டு வங்கி இந்த திட்டத்தை வடிவமைத்தது.
இதுதொடர்பாக பல்வேறு காலகட்டங்களில் ரிசர்வ் வங்கி வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. 2004ம் ஆண்டிலிருந்து இந்த திட்டம் விவசாயம் அல்லாத துறைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
2022ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புள்ளிவிவரத்தின்படி, ஜனவரி 2022 வரை சுமார் 2.70 கோடி தகுதிவாய்ந்த விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டுகளை வங்கிகள் வழங்கியுள்ளன.
ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின்கீழ், மேலும் 2.50 கோடி விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் அட்டைகள் வழங்கப்படும் எனவும் அந்த அட்டைகளுக்கு மொத்தமாக சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படும் எனவும் இந்திய அரசு அறிவித்தது.
எவ்வளவு கடன் வழங்கப்படும்?
சாகுபடி செலவுகளுக்காக மூன்று லட்சம் ரூபாய் வரை குறுகிய மற்றும் நீண்ட கால கடன்களை இதன்மூலம் பெற முடியும்.
பெரும்பாலும் குறுகிய கால கடன்கள் வழங்கப்படும். நீண்ட கால கடன்களை வழங்குவது தொடர்புடைய வங்கிகளின் விருப்பத்தைச் சார்ந்தது.
விவசாயம் தொடர்புடைய அனைத்து விதமான செலவுகளுக்கும் கடன்கள் வழங்கப்படுகின்றன.
விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள், உழுதல், கூலி செலவுகள், சாகுபடி செலவுகள் மற்றும் சந்தைச் செலவுகள் உள்ளிட்டவற்றுக்கு கடன்கள் வழங்கப்படுகின்றன.
கால்நடை வளர்ப்பு மற்றும் பம்ப் செட் உள்ளிட்ட வேளாண் சாதனங்கள் வாங்குவதற்கும் கடன்கள் வழங்கப்படுகின்றன.
இலவச காப்பீடும் வழங்கப்படுகிறது…
கிசான் கிரெடிட் கார்டு மூலம் விவசாயிகளுக்கு இலவச காப்பீடும் வழங்கப்படுகின்றது.
கிசான் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு விபத்து நேர்ந்தாலோ அல்லது முழுவதும் உடல் செயலிழந்தாலோ அல்லது இறக்க நேரிட்டாலோ 50 ஆயிரம் ரூபாய் வரை இலவச காப்பீடும் செய்யப்படுகிறது.
மற்ற ஆபத்துகள் ஏதேனும் நேரிட்டால் 25 ஆயிரம் ரூபாய் வரை காப்பீடு செய்யப்படுகிறது.
தகுதிவாய்ந்த நபர்களுக்கு கிசான் கிரெடிட் கார்டுடன் டெபிட் கார்டு, ஸ்மார்ட் கார்டு மற்றும் சேமிப்பு கணக்கும் வழங்கப்படும்.
கடன் பெறுவதற்கு உத்தரவாதம் வேண்டுமா?
1.60 லட்சம் ரூபாய் வரை கடன் பெறுவதற்கு எந்தவொரு உத்தரவாதமும் தேவையில்லை.
வங்கிகள் இந்த கார்டு வைத்திருப்பவர்களுக்கு குறைந்த வட்டியில் கடன்களை வழங்குகின்றன.
அதற்கு மேல் கடன் வாங்குவதற்கு உத்தரவாதம் தேவைப்படும்.
கடனை செலுத்துவது எப்படி?
கிசான் கிரெடிட் கார்டு மூலம் வழங்கப்படும் அனைத்து கடன்களும் பயிர் சாகுபடி செலவுகளுக்காக வழங்கப்படுகிறது. எனவே, பெரும்பாலான கடன்கள் குறுகிய கால கடன்களே.
அதிகபட்ச கடன் காலம் சுமார் 5 ஆண்டுகள். மேலும் சாகுபடி காலம் முடிந்த பின்னர் கடனை செலுத்தலாம்.
உதாரணமாக ஒருவர் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியிலிருந்து கடன் பெறுகிறார் என வைத்துக்கொள்வோம்.
சம்பா சாகுபடி பருவத்தில் ஒரு பயிருக்கு வாங்கிய கடனை, அந்த பருவம் முடிந்ததைத் தொடர்ந்து, அடுத்த ஜனவரி 31க்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்.
குறுவை சாகுபடி பருவத்தில் ஒரு பயிருக்கு வாங்கிய கடனை, அந்த பருவம் முடிந்ததைத் தொடர்ந்து ஜூலை 31க்குள் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும்.
சம்பா மற்றும் குறுவை சாகுபடி பருவத்தில் இரண்டு அல்லது மூன்று பயிர்களுக்கு கடன் பெற்றால், ஜூலை 31க்குள் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும்.
நீண்ட கால பயிர்களுக்கு கடன் பெற்றால், கடன் பெற்ற ஓராண்டுக்குள் அதனை திருப்பிச் செலுத்த வேண்டும்.
இந்த கடன் தொகையை விவசாயிகள் தங்களின் கிசான் கிரெடிட் கணக்கிலேயே நேரடியாக செலுத்த வேண்டும்.
கடன்களுக்கான காலக்கெடுவுக்குள் கடன் தொகை, வட்டி மற்றும் சேவை கட்டணம் முழுவதையும் செலுத்த வேண்டும்.
எவ்வளவு கடன் பெறலாம் என்பதை அறிந்துகொள்வது எப்படி?
கிசான் கிரெடிட் கார்டு மூலம் எவ்வளவு கடன் பெற முடியும் என்பதை விவசாயி ஒருவர் எளிதில் அறிந்துகொள்ள முடியும். அதற்கென வங்கிகள் கிசான் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கான கடன் கால்குலேட்டர்களை வைத்துள்ளன.
எதன் அடிப்படையில் கடனுக்கு ஒப்புதல் வழங்கப்படுகின்றன?
கிசான் கிரெடிட் கார்டு மூலம் ஐந்து ஆண்டுகளுக்கு வெவ்வேறு கட்டங்களாக கடன் வழங்கப்படுகிறது. உதாரணத்திற்கு இரண்டு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யும் சிறு விவசாயியை எடுத்துக்கொள்வோம்.
முதலாம் ஆண்டில் ஒரு ஏக்கர் நிலத்தில் நெற்பயிரும் மற்றொரு ஏக்கரில் கரும்பும் சாகுபடி செய்ய விரும்புகிறார் என்றால்…
* ஒரு ஏக்கரில் நெல் விளைவிப்பதற்கான செலவுகள் + பயிர் காப்பீடு: ரூ. 11,000
* கரும்பு சாகுபடிக்கான செலவுகள் + பயிர் காப்பீடு: ரூ. 22,000 முதலாம் ஆண்டில் இந்த பயிர்களுக்கான கடன் தொகை…
ஒரு ஏக்கரில் நெற்பயிர் மற்றும் மற்றொரு ஏக்கரில் கரும்பு சாகுபடிக்கான செலவுகள் (11,000 + 22,000) = ரூ. 33,000
* சாகுபடிக்கு முன்பு 10% கூடுதல் செலவுகள்: ரூ. 3,300
* 20% நில மேலாண்மைக்கான கூடுதல் செலவுகள்: ரூ. 6,600 __________________________
முதல் ஆண்டுக்கான பயிர்க்கடனுக்கான அதிகபட்ச வரம்பு ரூ. 42,900. __________________________
அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் செலவுகளில் 10% அதிகமாக சேர்த்து கடன் வழங்கப்படும்.
முதலாம் ஆண்டு அதிகபட்ச கடன் தொகை: ரூ. 42,900
இரண்டாம் ஆண்டில் 10% கூடுதல் செலவுகளுடன் (42,900 + 4,300): ரூ. 47,200
மூன்றாம் ஆண்டில் 10% கூடுதல் கட்டணத்துடன் (47,900+4,700): ரூ. 51,900
நான்காம் ஆண்டில் 10% கூடுதல் கட்டணத்துடன்: ரூ. 57,100
ஐந்தாம் ஆண்டில் 10% கூடுதல் கட்டணத்துடன் (57,100+5,700): ரூ. 62,800
(ஆதாரம்: ரிசர்வ் வங்கி)
தகுதிவாய்ந்தவர்கள் யார்?
நிலம் வைத்துள்ள விவசாயிகள், குத்தகை விவசாயிகள், நிலத்தைப் பகிர்ந்து விவசாயம் செய்பவர்கள், குத்தகைதாரர்கள்
சுய உதவிக்குழுக்கள், குத்தகை விவசாயிகள் உள்ளிட்ட கூட்டுறவு விவசாயிகள், கூட்டுறவு விவசாய குழுக்கள்.
மீன் – இறால் பண்ணை விவசாயிகள் (Acqua farmers), கோழிப்பண்ணை விவசாயிகளும் இத்திட்டத்தின் மூலம் கடன் பெறலாம்.
18 முதல் 75 வயதுக்குட்பட்ட அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கலாம்.
விவசாயிகள் 75 வயதைக் கடந்துவிட்டால்…
75 வயதைக் கடந்த விவசாயியும் கிசான் கிரெடிட் கார்டு பெற முடியும். ஆனால், அவருடைய சட்டபூர்வ வாரிசு ஒருவர், தன்னை கடன் பெறுபவராக இத்திட்டத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த அட்டையை எங்கு பெறுவது?
அனைத்து தேசிய வங்கிகள், தனியார் வங்கிகள், ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி உள்ளிட்ட வங்கிகளில் கிசான் கிரெடிட் கார்டை பெற முடியும்.
ரூபே கார்டுகளை கிசான் கிரெடிட் கார்டாக இந்திய அரசு வழங்குகிறது. இந்த கார்டு மூலம் விவசாயிகள் கடன்களை பெறலாம்.
வட்டி விகிதம் என்ன?
கிசான் கிரெடிட் கார்டு மூலம் பெறும் கடன்களுக்கு குறைந்த வட்டி விகிதங்களை வங்கிகள் நிர்ணயித்துள்ளன.
குறைந்தபட்சம் 7% முதல் அதிகபட்சமாக 14% வரை வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வட்டி விகிதம் தொடர்புடைய வங்கிகளை பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது.
கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு இந்திய அரசு வட்டி தள்ளுபடியும் வழங்குகிறது.
சில வங்கிகளின் வட்டி விகிதங்கள்:
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா – 7%
பஞ்சாப் நேஷனல் வங்கி – 7%
ஹெச்.டி.எஃப்.சி வங்கி – 9%
ஆக்ஸிஸ் வங்கி – 8.85%
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – 7%
யூசிஓ வங்கி – 7%
ஐசிஐசிஐ வங்கி – 9%
கிசான் கிரெடிட் கார்டை பெறுவது எப்படி?
தங்களுக்கு அருகாமையில் உள்ள வங்கிகளுக்கு சென்று கிசான் கிரெடிட் கார்டு பெறுவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்துதர வேண்டும்.
இந்த விண்ணப்பம் ஒரு பக்க அளவிலானது மட்டுமே.
இந்த விண்ணப்பத்தை ஆராய்ந்த பின்னர், வங்கி அதிகாரிகள் கிசான் கிரெடிட் கார்டை வழங்குவார்கள்.
தொடர்புடைய வங்கியின் இணையதளம் மூலமாகவும் இதற்காக விண்ணப்பிக்கலாம்.
என்னென்ன ஆவணங்கள் தேவை?
*பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம்
* பாஸ்போர்ட் அளவிலான இரண்டு புகைப்படங்கள்
* அடையாள அட்டை (ஆதார், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவை)
* ஆதார் அட்டை அல்லது ஓட்டுநர் உரிமத்தை முகவரி சான்றுக்காக வழங்க வேண்டும்.
* விவசாயிக்கான வேளாண் ஆவணங்கள் / வருவாய் அதிகாரிகளால் சான்றளிக்கப்பட்ட குத்தகைதாரரின் பற்று வரவுக் குறிப்பு (pass book)
சிபில் ஸ்கோர் அவசியமா?
பொதுவாக அதற்கான தேவை இல்லை. ஆனால், இதன்கீழ் கடன் வழங்க சிபில் ஸ்கோரையும் சில வங்கிகள் கணக்கில் எடுத்துக்கொள்கிறது.
சிபில் ஸ்கோர் 750 புள்ளிகளுக்கும் அதிகமாக இருந்தால்தான் சில வங்கிகள் கடன் வழங்குகின்றன.
அதற்கும் குறைவாக சிபில் ஸ்கோர் இருந்தால் கடன் வழங்கப்படாது.
ரூ.1,60,000 வரை இத்திட்டத்தின்கீழ் கடன் வழங்க எந்தவொரு பிணையும் இன்றி வழங்கப்படுகிறது.
கடன் தொகையை எந்தவொரு ஏடிஎம்மிலிருந்தும் எடுத்துக்கொள்ளலாம்.
வங்கிக்கு நேரடியாக சென்றும் அந்த தொகையை பெற்றுக்கொள்ளலாம்.
உரம் மற்றும் பூச்சி மருந்து கடைகளில் நேரடியாக பணம் செலுத்தாமல் கிசான் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்.
கடன் தொகையை பெற முடியாவிட்டால் யாரிடம் புகார் செய்வது?
கிசான் கிரெடிட் கார்டு பெறுவதில் சிக்கல்கள் நேரிட்டாலோ அல்லது அதுதொடர்பான தகவல்களை பெறுவதற்கும் தொடர்புகொள்ள உதவி மையத்தை இந்திய அரசு அமைத்துள்ளது.
1800115526, 011-24300606 ஆகிய இலவச அழைப்பு எண்கள் மூலம் இந்த மையத்தை தொடர்புகொள்ளலாம்.
“வங்கி துறையில் இது நல்லவொரு திட்டம். அனைத்து விவசாயிகளுக்கும் பயனளிக்கக்கூடியது” என்கிறார், விஜயவாடாவை சேர்ந்த வழக்குரைஞரும் நிதி நிபுணருமான எஸ். ஆனந்த்.
இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு பின்பும் கூட வங்கிகளிலிருந்து விவசாயிகள் கடன் பெறுவது இன்னும் கடினமானதாக உள்ளது என்கிறார் அவர்.
1951ம் ஆண்டில் ரிசர்வ் வங்கியால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, அந்த காலகட்டத்தில் வெறும் 3 சதவீத விவசாயிகள் மட்டுமே வங்கிகளிடமிருந்து முறைசார் கடன்களை பெற்றிருந்தனர். இந்த விகிதத்தை அதிகப்படுத்த தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
பல முயற்சிகளுக்குப் பின்பும் இந்த விகிதம் 30 சதவீதத்தைத் தாண்டவில்லை.
முறைசாரா அமைப்புகளிடமிருந்து அதிக வட்டியில் கடன்களை பெற்று இன்றும் விவசாயிகள் புதைகுழிகளில் சிக்கியுள்ளனர்.
இந்திய அரசால் கொண்டுவரப்பட்ட கிசான் கிரெடிட் கார்டு திட்டம் வங்கி துறை மற்றும் வேளாண் துறை இரண்டுக்கும் சிறந்த திட்டமாக கருதப்படுகிறது.
இத்திட்டத்தின்மூலம் விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் கடன் வழங்கப்படுகிறது.
மற்ற துறைகளில் எந்த நோக்கத்திற்காக கடன் வழங்கப்படுகிறதோ அதற்காக அக்கடன் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதில்லை என்றும் ஆனந்த் கூறுகிறார். ஆனால், விவசாய துறையில் இது மிகவும் குறைவு.
மேலும், குறைவான வட்டி விகிதத்தில் இத்திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படுகிறது.
இத்திட்டம் விவசாயிகளுக்கு மிகவும் பயனளிக்கக்கூடியது என்பதில் சந்தேகமில்லை.
இத்திட்டத்தை முழுமையாக விவசாயிகள் பயன்படுத்தும்போது இத்திட்டத்தின் இலக்கை அடைய முடியும்.