டிஎன்பிஎஸ்சிக்கு தலைவர், உறுப்பினர்கள் நியமிக்கப்படாமல் இருப்பதால் பெரும் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இளைஞர்களுக்கு கனவாகவே மாறி உள்ளது அரசு பணி.
அரசு பணிக்கு தேர்வு எழுதியவர்கள் பணி கிடைக்காமலும், முடிவுகள் வெளிவராமலும் தாமதமாகி அவதிப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
இன்றைய சூழலில் தனியார் வேலைகளில் ஐடி துறையை தவிர மற்ற துறைகளில் எந்த சலுகையும் பெரிய அளவில் இல்லை. வருமானமும் பதவி உயர்வும், வேலைக்கான நிலைத்தன்மையும் சுத்தமாக இல்லை.
ஏன் வேலைக்கான உத்தரவாதம் ஐடி துறையில் கூட இல்லை. எப்போது வேண்டுமானாலும் வீட்டிற்கு அனுப்பலாம் என்பதே நிலையாக உள்ளது.
இதனால் பலரும் அரசு வேலைகளில் சேர்ந்து நல்ல ஊதியம் பெற்று நிம்மதியாக வாழ விரும்புகிறார்கள். ஆனால் அரசு வேலையில் சேர்வது என்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை.
அரசுத் துறைகளில் சேர விரும்புவோர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வில் பல லட்சம் பேருடன் போட்டி போட்டு தேர்ச்சி பெற வேண்டும்.
டிஎன்பிஎஸ்சியை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசுத் துறைகளின் கீழ் அரசு அனுமதிக்கும் காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்தும், தேர்வு அட்டவணை குறித்தும், அறிவிப்புகளை ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் வெளியிடுகிறது. அதன்படி தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை நியமனம் செய்கிறது.
ஆனால் வழக்கமான பணிகளை கூட டிஎன்பிஎஸ்சி நிறைவேற்றுவதில் தடுமாறுவதாக கூறப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி சார்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக அறிவிப்புகள் வெளியிடுவதிலும், அவ்வாறு வெளியிடப்படும் அறிவிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்களுக்கு எழுத்துத் தேர்வுக்கான முடிவுகளை அறிவிப்பதிலும் பெரும் தாமதம் செய்து வருவதாக தேர்வர்கள் குமுறுகிறார்கள்.
2021ம் ஆண்டில் இருந்தே அரசு வேலைகளில் வேலை வாய்ப்புகள் பெரிய அளவில் குறைந்து விட்டதாம். குறிப்பாக கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு காலி பணியிடங்கள் சரிவர நிரப்பப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தேர்வர்களிடம் உள்ளது.
கடந்த இரண்டு வருடங்களாக நடந்த தேர்வுகளுக்கான முடிவையும் டிஎன்பிஎஸ்சி வெளியிடுவதில் பெரிய அளவில் தாமதம் செய்து வருவதாக தேர்வர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட குரூப்-2, 2ஏ தேர்வுக்கான நடைமுறைகள் இன்னும் முடியவில்லை. இதேபோல் குரூப் 2 முதல்நிலைத் தேர்வைத் தொடர்ந்து நடத்தப்பட்ட முதன்மைத் தேர்வு முடிவு 11 மாதங்களுக்கு பிறகு வருகிற 12-ந்தேதி வெளியிடப்பட உள்ளது.
இதில் வெற்றி பெறுவோருக்கு பணி ஆணை கையில் கிடைக்க எத்தனை நாட்கள் ஆகும் என்று தெரியவில்லை என்று தேர்வர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
இதேபோல் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் அறிவிக்கப்பட்ட குரூப்-1 பணிகளுக்கான தேர்வு முடிவும் கிடப்பிலேயே உள்ளதால் அவர்களும் முடிவுக்காக காத்திருக்கிறார்கள்.
இது ஒருபுறம் எனில் குரூப்-4 பதவிகளுக்கான அறிவிப்புக்கு ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் நிலை இருப்பதாக தேர்வர்கள் கூறுகிறார்கள்.
உண்மையில் டிஎன்பிஎஸ்சி இவ்வளவு தடுமாறுவதற்கு உண்மையான காரணம், டி.என்.பி.எஸ்.சி. தலைவர், உறுப்பினர்கள் பதவிக்கு ஆட்கள் நியமிக்கப்படாதது தான் என்கிறார்கள் தேர்வர்கள்.
இதன் காரணமாகவே, தேர்வு முடிவுகள், அறிவிப்புகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. டிஎன்பிஎஸ்சிக்கு தேர்வர்கள் வைக்கும் கோரிக்கை இந்த இரண்டு தான்.
சரியான நேரத்தில் தேர்வுகளை நடத்தி முடிவுகளை அறிவித்து, பணியாணை வழங்க வேண்டும். அரசு பணிகளின் எண்ணிக்கையும் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.
அமைச்சர் தங்கம் தென்னரசும், முதல்வர் ஸ்டாலினும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.