தவணை தவறி நிலுவையில் உள்ள கடன்களை வசூலிக்க கூட்டுறவு சங்கம், வங்கிகளில் செயல்பாட்டுக்கு வரும் சிறப்பு கடன் தீர்வு திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு சங்கம், வங்கிகளில் தவணை தவறி நிலுவையில் உள்ள கடன்களுக்கு சிறப்பு கடன் தீர்வு திட்டத்தின் கீழ் கூடுதல் வட்டி, அபராத வட்டி, இதர செலவினங்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம் என அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கூட்டுறவு சங்கம், வங்கிகளில் தவணை தவறி நிலுவையில் உள்ள கடன்களுக்கு தீர்வு காணும் சிறப்பு கடன் தீர்வு திட்டம் தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
“தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளின் கடன்தாரர்களின் வட்டிசுமையை குறைக்கவும், கூட்டுறவு நிறுவனங்களில் நீண்ட காலமாக வசூல் ஆகாமல் நிலுவையில் உள்ள தவணை தவறிய கடன்களை வசூல் செய்து இந்நிறுவனங்களின் நிதிநிலையைப் பலப்படுத்தவும் ஒரு சிறப்பு கடன் தீர்வு திட்டம், கூட்டுறவுத்துறை மானியக்கோரிகையின் போது அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 31.12.2022 அன்றைய தினத்தில் முழுமையாக தவணை தவறி நிலுவையில் உள்ள கடன்களுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடன் வழங்கப்பட்ட தேதியில் இருந்து ஒப்பந்தம் மேற்கொள்ளும் நாள் முடிய அசலுக்கு 9 சதவீதம் சாதாரண வட்டி வசூலிக்கப்படும். கூடுதல் வட்டி, அபராத வட்டி, இதர செலவினங்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.
மேலும், இத்திட்டத்தின்படி கணக்கிடப்பட்ட நிலுவைத்தொகையில் 25 சதவீத தொகையை அரசாணை வெளியிடப்பட்ட நாளில் இருந்து 3 மாதத்திற்குள் செலுத்தி, வங்கி மற்றும் சங்கத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும். மீதமுள்ள 75 சதவீத தொகையை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நாளில் இருந்து 6 மாத காலத்திற்குள் அதிகபட்சமாக 6 தவணைகளுக்குள் செலுத்த வேண்டும்.
இத்திட்டத்தின் மூலம் 4 லட்சத்து 73 ஆயிரத்து 67 உறுப்பினர்களுக்கு சுமார் ரூ.500 கோடி அளவிற்கு கூடுதல் வட்டி, அபராத வட்டி மற்றும் இதர செலவினங்கள் சேர்த்து தள்ளுபடியாக கிடைக்கும். இதுமட்டுமின்றி கூட்டுறவு நிறுவனங்களுக்கு சுமார் ஆயிரத்து 500 கோடி ரூபாய் திரும்ப கிடைக்க வாய்ப்பு உள்ளது.எனவே, கடன்தாரர்கள் தொடர்புடைய கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளை அணுகி இத்திட்டத்தின் மூலம் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” இவ்வாறு அமைச்சர் பெரிய கருப்பன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.