வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கோடியக்கரை சரணாலயப் பகுதிக்கு வெளிநாடுகளில் இருந்து பறவைகள் வருகை தொடங்கியுள்ளது.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்துள்ள கோடியக்கரை வன உயிரின பறவைகள் சரணாலயத்துக்கு ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் வெளிநாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான பறவைகள் கூட்டம், கூட்டமாக வந்து செல்வது வழக்கம்.
சைபீரியா, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆண்டுதோறும் 247 பறவை இனங்கள் இங்கு வந்து செல்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், நிகழாண்டு வடக்கிழக்குப் பருவ மழை தாமதமானதுடன், மழைப்பொழிவும் குறைவாகவே இருந்து வருகிறது. இதனால் வெளிநாட்டு பறவைகள் வருகையும் தாமதமானது.
இந்தநிலையில், கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதைத்தொடா்ந்து பறவைகளின் வருகையும் தொடங்கியுள்ளது. சரணாலயத்தில் சிறப்புபெற்ற பறவையான பூநாரை உள்ளிட்ட சில இனப் பறவைகள் பெயரளவில் மட்டுமே காணப்படுகிறது. ஆனால், செங்கால் நாரை உள்ளிட்ட இனப் பறவைகள் அதிகம் காணப்படுகிறது. மழை தொடந்தால் பறவைகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று சரணாலய அலுவலா்கள் நம்பிக்கை தெரிவித்தனா்.
Click Here to Join: