2023 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 24 மொழிகளிலிருந்து கவிதை, சிறுகதை, நாவல், இலக்கிய ஆய்வு படைப்புகளுக்காக எழுத்தாளர்கள் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தமிழில், நீர்வழிப் படூஉம் நாவலுக்காக எழுத்தாளர் தேவி பாரதிக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
40 ஆண்டுகளாக தமிழ் இலக்கியத்தில் பங்களிப்பு செய்து வருபவர் தேவி பாரதி. நிழலின் தனிமை, அற்ற குளத்து அற்புத மீன்கள், பிறகும் ஒரு இரவு, நொய்யல், நட்ராஜ் மகராஜ் உள்ளிட்ட நாவல்களையும் பல சிறுகதைகளையும் எழுதியுள்ளார். சினிமாவிலும் சில படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார்.
மலையாளத்தில் இலக்கிய ஆய்வுக்காக எழுத்தாளர் ஈ.வி.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிறமொழிகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள் சஞ்சீவ் ( நாவல் – ஹிந்தி), பதஞ்சலி சாஸ்திரி ( சிறுகதைத் தொகுப்பு – தெலுங்கு), லக்ஷ்மிஷா தொல்பாடி (கட்டுரைத் தொகுப்பு – கன்னடம்) உள்பட 24 பேர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.