ஆளுநர் மாளிகையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகளை பிரதமர் மோடி சந்தித்துப் பேச உள்ளதாக தகவல்.

3 நாள் பயணமாக இன்று தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடி, சென்னையில் கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைக்கிறார். பிரதமர் வருகையையொட்டி, சென்னையில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தேசிய அளவிலான கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள், முதன் முறையாக, தமிழ்நாட்டில் நடைபெற உள்ளன. இதனை தொடங்கி வைக்கக் கோரி, பிரதமருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்று 3 நாள் பயணமாக இன்று தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார்.
அதன்படி, மாலை 4 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் பிரதமர் மோடி, 4.50 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். மாலை 5.15 மணிக்கு ஹெலிகாப்டரில் ஐஎன்எஸ் அடையாறு படைதளம் செல்லும் அவர், அங்கிருந்து கேலோ இந்தியா தொடக்க நிகழ்ச்சி நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு காரில் செல்கிறார்.