டோக்கியோ: ஜப்பானில் கடந்த 1 ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோரின் எணணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது.
ஜப்பானில் ஹொன்ஷு தீவுகள் பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நேற்று முன் தினம் (ஜனவரி 1) ஏற்பட்டது. அதாவது இந்திய நேரப்படி பிற்பகல் 12.40 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.5 ஆக பதிவாகியிருந்தது.
90 நிமிடங்களில் அடுத்துத்து 21 முறை நிலநடுக்கம், நில அதிர்வுகள் ஏற்பட்டன. அண்மைக்காலங்களில் இது போன்ற ஒரு நிலநடுக்கத்தை ஜப்பான் பார்த்ததில்லை. ஜப்பானின் மேற்குகரையையொட்டியுள்ள பகுதிகளில் அதிக தாக்கம் உணரப்பட்டது. ஹொகைடோ தீவுகள் முதல் நாகசாகி வரை நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது.
இதனால் அந்த பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. 1 முதல் 3 மீட்டர் உயரம் வரை, சில இடங்களில் 5 மீட்டர் உயரத்திற்கு கூட அலைகள் எழும் என எச்சரிக்கப்பட்டது. இதனால் மக்கள் உயரமான கட்டடங்களில் தஞ்சமடையுமாறு அறிவுறுத்தப்பட்டது. நிலநடுக்கத்தால் சாலைகளில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 62 பேர் பலியாகிவிட்டனர்.
சுனாமி எச்சரிக்கை விடுத்த நிலையில் நிறைய இடங்களில் கடல் ஆக்ரோஷமாக இருந்தது. கடலோரம் வசிக்கும் இடங்களில் தண்ணீர் புகுந்தது. ஹோன்ஷு தீவுகளில் கடல் அலை 1 மீட்டரை தாண்டி உயர்ந்தது. நேற்றைய தினம் சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது. நிலநடுக்கத்தால் நோட்டோ மாகாணத்தில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
100க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணிகளில் மீட்பு பணியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் அங்கு நிலவி வரும் வானிலை காரணமாக இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 31, 800 க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர்.
நிலநடுக்கத்திற்கிடையே நோட்டோ மாகாணத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. கடலோர நகரமான சூஸுவில் அதன் மேயர் மசுஹிரோ இசுமியா கூறுகையில் அங்கு ஒரு வீடுகள் கூட இல்லை. எல்லாமே தரைமட்டமாகிவிட்டன என்றார்.
பல இடங்களில் மின்சாரம் இல்லை. தண்ணீர் இல்லை. கடந்த 24 மணி நேரமாக 1000 பேர் காத்திருக்கும் சூழலில் புல்லட் ரயில்களின் இயக்கம் தொடங்கியது. மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2011 ஆம் ஆண்டு ஜப்பானின் வடகிழக்கு பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 18,500 இறந்தும் மாயமாகியும் இருந்தனர். இதன் ரிக்டர் அளவு 9.0 ஆகும். ஃபுகுஷிமாவில் இருந்த அணுஆயுத உலையை அப்படியே அழித்துவிட்டது. இதுதான் உலகின் மோசமான பேரிடர் என சொல்லப்பட்டது.