டிஆர்பி தேர்வு.. இடைநிலை ஆசிரியர் பணிக்கு நாளை முதல் விண்ணப்பம்.. முறைகேட்டில் ஈடுபட்டால் நடவடிக்கை/-

தொடக்கக் கல்வித்துறையில் காலியாக உள்ள 1768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பினை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் 14ஆம் தேதி புதன்கிழமை முதல் மார்ச் 15ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம்:

இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தொடக்க கல்வித்துறையில் 2023-24ம் ஆண்டில் ஏற்பட்ட காலிப் பணியிடங்களில் 1768 இடைநிலை ஆசிரியர்கள் நேரடியாக நியமனம் செய்யப்படுகின்றனர். பிப்ரவரி 14ம் தேதி நாளைய தினம் முதல் மார்ச் 15ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு ஜூன் 23ம் தேதி நடக்கும். பின்னடைவு இடங்கள் தமிழ் 19, சிறுபான்மை மொழி 20 இடங்கள் உள்ளன. இவை தவிர புதிய இடங்களாக தமிழ் 1388, தெலுங்கு 75, உருது 35, கன்னடம் 2 பணியிடங்கள் உள்ளன.

எத்தனை இடங்கள் காலி:

கள்ளர் நலப் பள்ளிகளில் 18, ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் 139, மலைவாழ் நல பள்ளிகளில் 22, மாற்றுத்திறன் கொண்டோர் நலப் பள்ளிகளில் 29 இடங்களும், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 20, சிறுபான்மை மொழி உருது 1 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. இந்த போட்டித்தேர்வு தொடர்பான முழு விவரங்கள் அனைத்தும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு:

போட்டித் தேர்வில் பங்கேற்க விரும்பும் நபர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்1 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அவர்களுக்கு தற்போது பணி நியமனத்துக்கான போட்டித் தேர்வு ஜூன் மாதம் நடத்தப்படும். தேர்வில் 150 கேள்விகள் இடம்பெறும். மதிப்பெண்கள் 150 வழங்கப்படும். இந்த தேர்வில் பொதுப் பிரிவினர் குறைந்தபட்சம் 60 மதிப்பெண்கள் (40 சதவீதம்), பிசி, பிசிஎம், எம்பிசி, எஸ்சி, எஸ்சிஏ மற்றும் எஸ்டி பிரிவினர் குறைந்தபட்சமாக 45 (30 சதவீதம்) மதிப்பெண்ணும் பெற வேண்டும்.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது தவறான தகவல்களை தேர்வு எழுதும் நபர்கள் அளித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்படும் பணிகள் வெளிப்படைத்தன்மையுடன் தகுதியின் அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படும்.

போட்டித் தேர்வுக்கான விண்ணப்பித்தல் அளிக்கப்படும் அனைத்து தகவல்களுக்கும் தேர்வு எழுதும் நபர்களே முழு பொறுப்பேற்க வேண்டும். கணினி மையங்களில் ஏற்படும் தவறுகளுக்கும் அவர்களே பொறுப்பு. ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக படித்து பார்த்த பிறகு விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

இடைநிலை ஆசிரியர் தேர்வு:

தமிழ், உருது, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிப் பாடங்களுக்கான இடைநிலை ஆசிரியர்களுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் எவ்வளவு இடங்கள் இருக்கிறது, எந்த இட ஒதுக்கீட்டின் கீழ் அவை நிரப்பப்படும் என்ற விவரங்கள் இணைய தளத்தில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதிகள் என்னென்ன:

இடைநிலை ஆசிரியர் பணிக்கு 2024 ஜூலை மாதம் 53 வயது நிரம்பியவர்கள் பொதுப் பிரிவின் கீழும், இட ஒதுக்கீட்டு பிரிவின் கீழ் உள்ளவர்கள் 58 வயது வரை உள்ளவர்களாகவும் விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்கள். தமிழ்மொழியில் அனைவரும் தகுதி பெற வேண்டும்.

தமிழில் தேர்ச்சி:

தமிழ்மொழி தகுதித் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே அவர்களின் அடுத்த தாள் திருத்தப்படும். தேர்வுக் கட்டணமாக பொது பிரிவினர் ரூ.600 செலுத்த வேண்டும். இட ஒதுக்கீட்டு பிரிவினர் ரூ.300 கட்டணம் செலுத்தினால் போதுமானது. தேர்வுக் கட்டணத்தை இணைய தளம் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.

முறைகேட்டில் ஈடுபட்டால் நடவடிக்கை:

தேர்வுக்கான கேள்வித்தாளில் மொழிப்பாடத்துக்கான கேள்விகள் அந்த மொழியிலும், ஆங்கில பாடத்துக்கான கேள்விகள் ஆங்கிலத்திலும், இதர பாடங்களுக்கான கேள்விகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் இடம்பெறும். தேர்வில் பெறும் மதிப்பெண் மற்றும் ஏற்கனவே தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் ஆகியவற்றை கொண்டு தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும். பின்னர் சான்று சரிபார்ப்பு நடத்தி தொடக்க கல்வித்துறை மற்றும் பிற துறைகளின் மூலம் நியமனங்கள் வழங்கப்படும். தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments