பணியிடங்கள் குறைவு என்று நினைத்தோ அல்லது இதெல்லாம் நம்மால் முடியுமா என்று நினைத்தோ சோர்ந்து போய் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு அப்ளை பண்ணாம விட்டுறாதீங்க.. ஏனெனில் அடுத்த ஆண்டு ஜனவரியில் தான் தேர்வு முடிவு வரப்போகிறது. அதற்குள் உங்களுக்கு முந்தைய வருடங்களை போல் ஜாக்பாட் அடிக்க வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி என்று சுருக்கமாக அழைக்கப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் – 4 தேர்வுகளை அறிவித்துள்ளது.கிராம நிர்வாக அதிகாரி, இளநிலை உதவியாளர், தட்டச்சர், எழுத்தர், வனக்காவலர், வனக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த முறை நடத்தப்பட உள்ள குரூப் 4 தேர்வின் மூலம் மொத்தமாக 6,244 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதில் குறிப்பிட வேண்டிய பணியிடங்கள் என்றால், 108 விஏஓ பணியிடங்கள், 2,442 இளநிலை உதவியாளர் பணியிடங்கள், சுமார் 1,700 தட்டச்சர் பணியிடங்கள் முக்கியமானவை ஆகும். இது தவிர வனக்காவலர் பணியிடங்களும் இடம் பெற்றுள்ளன.
குரூப் – 4 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 30-ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் பிப்ரவரி 28-ம் தேதி நள்ளிரவுக்கு முன்பாக இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் கடைசி நேரத்தில் மொத்தமாக வந்து விண்ணப்பித்தால் சர்வர் பிரச்சனையால் விண்ணப்பிக்க முடியாமல் போகலாம் என்பதையும் டிஎன்பிஎஸ்சி வெளிப்படையாகவே அறிவிக்கையில் கூறியுள்ளது.
குரூப் 4 தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ, www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
கடந்த முறை டிஎன்பிஎஸ்சி த தேர்வின் வழியே, வி.ஏ.ஓ., பதவியில், 494 காலியிடங்கள் உட்பட, பல்வேறு பதவிகளுக்கான, 9,351 இடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால் அதன்பிறகு கூடுதலாக, 1,929 இடங்கள் நியமன பட்டியலில் சேர்க்கப்பட்டது.வி.ஏ.ஓ., – 1,107; பிணையமற்ற இளநிலை உதவியாளர் பதவி, 4,722; பிணையம் உள்ள இளநிலை உதவியாளர் பதவி, 226; வரிவசூலிப்பாளர், 52; தட்டச்சர், 3,974; சுருக்கெழுத்தர், 931; கள ஆய்வாளர், 102 மற்றும் வரைவாளர், 156 என, 11 ஆயிரத்து, 270க்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்பட்டன.
இதேபோல் கடந்த 2022ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் நடத்திய குரூப் 2, 2ஏ காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 5,240 ஆக இருந்தது. இந்நிலையில், இந்த எண்ணிக்கையில் புதிதாக 620 காலிப் பணியிடங்கள் சேர்க்கப்பட்டன. இதனால், குரூப் 2, 2ஏ காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை 5,860 ஆக அதிகரித்தது.
எனவே பணியிடங்கள் குறைவு என்று நினைத்தோ அல்லது இதெல்லாம் நம்மால் முடியுமா என்று நினைத்தோ சோர்ந்து போய் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு அப்ளை பண்ணாமல் விட்டுவிட வேண்டாம்.. பின்னாளில் அதாவது தேர்வு முடிவு வெளியாவதற்குள் கடந்த தேர்வுகளை போல் கூடுதல் பணியிடங்களை நிரப்ப அறிவிப்புகள் வெளியானாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. எனவே அரசு பணியில் சேர விரும்புவோர் இந்த ஜாக்பாட் வாய்ப்பை தவறவிட்டுவிடாதீர்கள்.
இதேபோல் குரூப் 4 தேர்வு எழுதுவோருக்கு எந்த பாடங்களில் எல்லாம் கேள்விகள் இருக்கும் என்பதை தேர்வாணையம் அறிவிக்கையிலேயே பாடத்திட்டத்தை வெளியிட்டுள்ளது.. அந்த பாடத்திட்டங்கள் என்னென்ன என்பதை தெளிவாக அறிந்து கொண்டு அந்த பாடங்களை எல்லாம் படிக்க வேண்டும். கடைகளில் கிடைக்கும் புத்தகங்களை வாங்கி படிக்கிறீர்கள் என்றால், டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட பாடத்திட்டங்களின் பாட முழு பாடங்களும் உள்ள புத்தகங்களை படிக்க வேண்டும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள பாடப்புத்தகங்களை தெளிவாக படித்தவர்களால் அல்லது படித்து முடிப்பவர்களால் கண்டிப்பாக வெற்றி பெற முடியும். கூடுதலாக நாட்டு நடப்பு மற்றும் பொது அறிவு தேவைப்படும். இன்னும் 3 மாதம் இருக்கிறது. இப்போது ஆரம்பித்தால் கூட கண்டிப்பாக வெற்றியை நோக்கி பயணிக்க முடியும்.