தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்ட செவிலியர்களின் பணியை, நிரந்தர செவிலியர்களின் பணியுடன் ஒப்பீடு செய்து அறிக்கை அளிக்க, ஒய்வுபெற்ற நீதிபதிகள் பார்த்திபன் மற்றும் பாரதிதாசன் அடங்கிய குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் கடந்த 2015 ஆம் ஆண்டு தொகுப்பூதிய அடிப்படையில் 10,000 செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
2 ஆண்டுகளுக்குப் பின் பணி நிரந்தரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டும், 8 ஆண்டுகளாகியும் 4,000 செவிலியர்கள் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்.
இதை எதிர்த்த வழக்கில், தொகுப்பூதிய செவிலியர்கள் நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக பணி செய்தால் அவர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.
மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் தலைமையில் குழு அமைத்து நிரந்தர செவிலியர்களின் பணியுடன், தொகுப்பூதிய செவிலியர்கள் செய்யும் பணியை ஒப்பீடு செய்து 6 மாதத்தில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவது தொடர்பாக முடிவெடுக்க வேண்டுமென கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அரசு நிறைவேற்றாததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா அடங்கிய அமர்வு, ஒப்பன்த செவிலியர்கள், நிரந்தர செவிலியர்களின் பணி குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஒய்வு பெற்ற நீதிபதிகள் பார்த்திபன் மற்றும் பாரதிதாசன் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டது.
சரிபார்ப்பு குழு தனது பணிகளை முடித்து மார்ச் 8ம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தனர்.
என்ன பிரச்சனை:
செவிலியர்களை வேலைக்கு அமர்த்த எம்ஆர்பி செயல்படுகிறது. இந்நிலையில் ஒப்பந்தஅடிப்படையில் வேலை செய்யும் செவிலியர்களுக்கு ரூ.14,000 சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது அதேநேரம் தேசிய ஊரக வளர்ச்சி சார்ந்த செவிலியர் களுக்கு மட்டுமே ரூ.18,000 வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
தமிழக அரசு மருத்துவமனைகளிலும், கிராமப்புற, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பணியாற்றுகின்ற செவிலியர்களில் பலர் நிரந்தரமற்ற தொழிலாளர்களாகவும், ஒப்பந்தத் தொழிலாளர்களாகவும் குறைவான சம்பளத்துக்குப் பணியாற்றும் நிலை இருக்கிறது.
தமிழக ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் செவிலியர்களில் 55% பேர்தான் நிரந்தரப் பணியாளர்கள் என்கிற நிலை உள்ளது.
மற்றவர்கள், தொகுப்பூதியம் பெறும் தற்காலிக, ஒப்பந்தத் தொழிலாளர்களாக உள்ளனர்.
என்றாவது ஒரு நாள் பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என்ற நம்பிக்கையில் அவர்கள் வேலை பார்க்கிறார்கள்.
நிரந்தரப் பணியாளர்களாக உள்ள செவிலியர்கள் ரூ.48 ஆயிரம் ஊதியம் பெறுகிறார்கள்.
தொகுப்பூதியம் நிர்ணயிக்கப்பட்ட தற்காலிக செவிலியர்கள் ரூ.18 ஆயிரம் மட்டுமே பெறுகிறார்கள்.
ஒரே மாதிரியான பணியைச் செய்தாலும் ஒரு தரப்பினருக்கு மட்டும் ஊதியம் குறைவாக உள்ளது. இதுதான் பிரச்சனையாக உள்ளது.
இந்த விவகாரத்தில் தான் உயர்நீதிமன்றம் நிபுணர் குழு அமைத்து தற்போது உத்தரவிட்டுள்ளது.