You are currently viewing நடிகை வஹீதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது!

நடிகை வஹீதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது!

இந்தியத் திரைத் துறையில் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் ‘தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது’ பழம்பெரும் பாலிவுட்நடிகையான வஹீதா ரஹ்மானுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோரைக் கௌரவிக்கும் வகையில், இந்திய திரைப்படத்துறையின் தந்தை எனக்கருதப்படும் ’தாதாசாகெப் பால்கே’ அவர்களின் பெயரில், 1969ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் மத்திய அரசால் தாதா சாகேப் பால்கே விருது (Dadasaheb Phalke Award) வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருதினை நடிகர்கள் அமிதாப்பச்சன், அசோக் குமார், ராஜ்குமார், திலீப் குமார், சிவாஜி கணேசன், வினோத் கன்னா, இயக்குநர்கள் கே.பாலசந்தர், அடூர் கோபாலகிருஷ்ணன், சத்யஜித் ரே, கே.விஸ்வநாத், பாடகிகள் ஆஷா போஸ்லே, லதா மங்கேஷ்கர், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் பெற்றுள்ளனர். கொரோனா தாக்கத்தால் கடந்த 2020ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதுக்கு இந்தி நடிகை ஆஷா பரேக்கிற்கு கடந்தாண்டு தான் வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்தாண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருதுக்கு பழம்பெரும் நடிகை வஹீதா ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்தவரான இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், பெங்காலி  என பல மொழித் திரைப்படங்களில் சுமார் 68 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருகிறார். பாலிவுட்டின் மிகவும் விரும்பப்பட்ட நடிகைகளில் ஒருவராக வஹீதா ரஹ்மான் உள்ளார்.

இவரது கலையுலகச் சேவையைக் கௌரவிக்கும் வகையில் இந்தாண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது இவருக்கு வழங்கப்படுகிறது.

தமிழ் நடிகை

வஹீதா ரஹ்மான் தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 1938ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3ம் தேதி அன்று பிறந்தவர். அவரது தந்தை மாவட்ட நீதியாக இருந்தவர். பாரம்பரிய இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தபோதும், நடனத்தின் மீது கொண்ட காதலால் பரதநாட்டியத்தை சிறுவயது முதலே கற்றுக் கொள்ளத் தொடங்கினார். நடனத்தின் மீது ஒருபுறம் ஆர்வம் இருந்தாலும், மருத்துவராக வேண்டும் என்பதுதான் இவரது சிறுவயது கனவாக இருந்துள்ளது.

1955ம் ஆண்டு ’ரோஜுலு மராயி’ என்ற தெலுங்கு படத்தில் ’எருவக சாகலோய்’ என்ற பாடலில் தான் வஹீதா அறிமுகமானார். அதே ஆண்டு தமிழில் காலம் மாறிப்போச்சு படத்தில் குரூப் டான்ஸராகவும் அறிமுகமானார். அதன் தொடர்ச்சியாக, 1956ம் ஆண்டு வெளியான எம்ஜிஆர் நடித்த அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். இப்பாடல் அவரை நன்கு பிரபலமாக்கியது.

மற்றொரு மைல்கல்

தனது சிறந்த நடிப்பிற்காக ஏற்கனவே பல விருதுகளைக் குவித்தவர் வஹீதா. 1972ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்ற இவர், 2006ம் ஆண்டு NTR நேஷனல் விருது மற்றும் பத்ம பூஷன் விருதுகளையும் பெற்றுள்ளார். தற்போது அவரது திரையுலகப் பயணத்தில் மற்றொரு மைல்கல்லாக அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்துள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments