2024ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. முன்னாள் குடியரசுத் துணை தலைவர் வெங்கய்யா நாயுடு, மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் உள்ளிட்ட 132 நபர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நடப்பாண்டுக்கான பத்மவிபூஷண், பத்மபூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. குடியரசுத் முன்னாள் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் பிரபல நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உயரிய விருது அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு நடிகர் சிரஞ்சீவி நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலா மற்றும் பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியம் ஆகியோருக்கும், பீகாரைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் பிந்தேஷ்வர் பதக்-ஆகியோரும் பத்ம விபூஷண் விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இதேபோல, மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் உட்பட 17 பேருக்கு பத்ம பூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஃபாத்திமா பீவி, பிரபல பின்னணி பாடகி உஷா உதுப் ஆகியோருக்கும் பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த நாட்டுப்புற கலைஞரான 87 வயதான பத்ரப்பனுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி கிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்ற மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
இதைத் தவிர ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, நாகர்கோவிலைச் சேர்ந்த சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ், மருத்துவத்துறை சேவைக்காக ஜி.நாச்சியார், நாதஸ்வர வித்துவான் சேஷம்பட்டி சிவலிங்கம் உள்ளிட்ட 110 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா, அந்தமானைச் சேர்ந்த இயற்கை விவசாயி கே.செல்லம்மாள் ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.