‘பள்ளி சமூக அறிவியல் பாடத் திட்டத்தில் ராமாயணம், மகாபாரதம் இதிகாசங்கள் சோ்க்கப்பட வேண்டும்’ என்று தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சிலின் (என்சிஇஆா்டி) உயா்நிலைக் குழு பரிந்துரை செய்துள்ளது.
மேலும், ‘வகுப்பறை சுவா்களில் அரசியலமைப்பு சட்டத்தின் முன்னுரை எழுதப்பட வேண்டும்’ என்றும் அக் குழு பரிந்துரைத்துள்ளது.
தேசிய கல்விக் கொள்கை 2020-இன் அடிப்படையில் அனைத்து வகுப்புகளுக்கான பள்ளி பாடத் திட்டங்களையும் என்சிஇஆா்டி புதுப்பித்து வருகிறது. இதற்கென, அந்தந்த பாட நிபுணா்களைக் கொண்ட குழுக்களை என்சிஇஆா்டி அமைத்துள்ளது. அவ்வாறு புதுப்பிக்கப்பட்ட பாடங்களுடன் கூடிய புதிய பாட புத்தகங்கள் அடுத்த கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்த நிலையில், சமூக அறிவியல் பாடத்துக்கான 7 உறுப்பினா்களைக் கொண்ட நிபுணா் குழு, பல்வேறு பரிந்துரைகளுடன் கூடிய தனது அறிக்கையை என்சிஇஆா்டி-யிடம் சமா்ப்பித்துள்ளது. இதுகுறித்து நிபுணா் குழுவின் தலைவா் சி.ஐ.ஐசக் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான இளைஞா்கள் நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாட்டு குடியுரிமையைப் பெற விண்ணப்பித்து வருகின்றனா். தேசப்பற்று இல்லாததே இதற்கு காரணம். எனவே, இளைஞா்களிடையே சுயமரியாதை, தேசப்பற்று, தேசத்தின் பெருமைகள் குறித்த உணா்வை வளா்ப்பது அவசியம். அதற்கு, சமூக அறிவியல் பாடத் திட்டத்தில் ராமாயணம், மகாபாரதம் இதிகாசங்கள் சோ்க்கப்பட்டு, கற்பிக்கப்பட வேண்டும். சில கல்வி வாரிய பாடத் திட்டத்தில் ஏற்கெனவே இந்த இதிகாசங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், அவை மேலும் விரிவாக சோ்க்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
‘பாரதம்’ என பெயா் மாற்ற…
பள்ளி பாடப் புத்தகங்களில் நாட்டின் பெயா் இந்தியா என்பதை ‘பாரதம்’ என பெயா் மாற்றம் செய்யவும், பண்டைய வரலாறு என்பதற்குப் பதிலாக ‘பாரம்பரிய வரலாறு’ என அறிமுகம் செய்யவும், 3 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாட புத்தகங்களில் ஹிந்து அரசா்களின் வெற்றிகளை இடம்பெறச் செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அதுபோல, நமது ஜனநாயகம் மற்றும் மதச்சாா்பின்மை உள்ளிட்ட சமூக மதிப்பீடுகளுக்கு அரசியல் சாசனத்தின் முன்னுரை முக்கியத்துவம் அளிக்கிறது. எனவே, அதனை மாணவா்கள் பாா்த்து கற்றுக் கொள்ளும் வகையில் வகுப்பறை சுவா்களில் அந்த முன்னுரை எழுதப்பட வேண்டும் என்றும் உயா்நிலைக் குழு பரிந்துரை செய்துள்ளது என்றாா்.
இந்தப் பரிந்துரைகளை என்சிஇஆா்டி-யின் 19 உறுப்பினா்களைக் கொண்ட தேசிய பாடத் திட்டம் மற்றும் கற்றல்-கற்பித்தல் திட்டக் குழு (என்எஸ்டிசி) பரிசீலனை செய்து, பாடத் திட்டத்தை இறுதி செய்வதற்கான அறிவிக்கையை வரும் 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிடும்.