You are currently viewing பிரதமரின் வீடு கட்டும் திட்டம் ரூ. 2.75 லட்சம் – மானியமா? விண்ணப்பிப்பது எப்படி?

பிரதமரின் வீடு கட்டும் திட்டம் ரூ. 2.75 லட்சம் – மானியமா? விண்ணப்பிப்பது எப்படி?

இந்திய அரசின் ‘அனைவருக்கும் வீடு’ வழங்கும் திட்டத்தின் கீழ் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (பி.எம்.ஏ.ஒய்), 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் 2022 – 2023 ஆம் ஆண்டுக்குள் நாட்டிலுள்ள அனைவருக்கும் சொந்த வீடு கட்டித் தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, 2019ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள கிராமப்புற பகுதிகளில் 10 மில்லியன் வீடுகளும், 2022 – 2023 ஆம் ஆண்டிற்குள் நகர்ப்புறப் பகுதிகளில் 10 மில்லியன் வீடுகளும் கட்டித் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) மத்திய அரசின் திட்டம் என்றாலும் மாநில அரசும் நிதி ஒதுக்குகிறது. இந்த திட்டம், நகர்ப்புறம் (PMAY-U), கிராமப்புறம் (PMAY-G) என்று இரண்டு வகையாக செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் இத்திட்டத்தை பிரதமர் வீடு வழங்கும் திட்டம் நகரம் (PMAY-U) என உள்ளது. இதற்கு, தமிழ்நாடு நகர்ப்புற குடியிருப்பு மேம்பாட்டு வாரியம் மாநில முகமை நிறுவனமாக உள்ளது. கிராம ஊராட்சிகளில் மாநில ஊரக வளர்ச்சித்துறை அரசு முகமை நிறுவனமாக உள்ளது.

பிரதமரின் வீடு கட்டும் திட்டம் கிராமம், நகரம் ஆகிய இரண்டிலும் 2022-23ம் ஆண்டில் இந்தியா முழுவதும் 80 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும். இத்திட்டத்திற்காக 48 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் 2024ம் ஆண்டிற்கும் மேலும் 1.72 கோடி வீடுகள் கட்டப்படும் என்று மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கிராமப்புறங்களில் வீடு கட்ட

கிராமப்புறங்களில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு மாநில ஊரக வளர்சித்துறை முகமை நிறுவனமாக உள்ளதால், மாவட்ட அளவில் ஊரக வளர்சித்துறை திட்ட இயக்குநரும் வட்டார அளவில் வட்டார வளர்ச்சி அலுவலர் (பிடிஓ), கிராம ஊராட்சி அளவில் ஊராட்சி செயலாளர் வழியாக திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்திற்கான, அரசு மானியத் தொகை ரூ. 2.75 லட்சம் வழங்கப்படுகிறது. கிராம ஊராட்சி அலுவலங்களில் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பு மற்றும் தேவையின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, கட்டுமான பணிகள் முடிப்பதற்குள் முழுத் தொகையும் பயனாளியின் வங்கிக் கணக்கில், நேரடியாக செலுத்தப்படுகிறது.

திட்டத்தின் நடைமுறை

இத்திட்டத்தின்படி 25 சதுர மீட்டர்/ 269 சதுர அடிகள் கொண்ட கான்கீரிட் வீடு கட்டப்படுகிறது. இதில், ஒரு ஹால், படுக்கை அறை, சமையலறை, கழிப்பிடம் ஆகியவை இடம் பெற்றிருக்கும். வீடு கட்டுவதற்கு 4 தவணைகளாக தொகை விடுவிக்கப்படும்.

இதன்படி, அஸ்திவாரம் அமைந்த உடன் முதல் தவணை தொகை வழங்கப்படும். இதையடுத்து, சன்னல் மட்டம் வரை பணிகள் முடிந்தால் இரண்டாம் தவணைத் தொகையும் கூரை மட்டம் வரை கட்டுமான பணிகள் முடிந்ததும் 3வது தவணைத் தொகையும் வழங்கப்படும். வீட்டின் பூச்சு உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவு பெற்றதும் 4வது தவணைத் தொகை விடுவிக்கப்படும்.

கட்டுமான பணிகளின் போது வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் கிராம ஊராட்சி அலுவலகத்தின் வழியாக 4 கட்டங்களாக மொத்தம் 104 மூட்டை சிமெண்ட், 320 கிலோ இரும்பு கம்பிகள் வழங்கப்படும். இதற்கான செலவினம், மொத்த தொகையில் கழித்துக் கொள்ளப்படும். அதாவது, மொத்த மானியம் 2.75 லட்ச ரூபாயில் சிமென்ட், கம்பிக்கான தொகை போக, மீத தொகை பயனாளியின் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

தகுதிகள், தேவையான ஆவணங்கள்

விண்ணப்பதாரரின், வீட்டுமனை பத்திர நகல், வருமானச் சான்றிதழ். தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்குப் புத்தக நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் கிராம ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

கட்டப்படும் வீடு விண்ணப்பிக்கும் பயனாளிக்கு முதல் வீடாக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் மூன்று இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் நடைபெறும் திட்டம் என்பதால், மத்திய, மாநில அரசுகளின் அனுமதி பெற வேண்டியிருப்பதால், விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு வீடு கட்டும் பணி ஆணை வழங்க, 6 மாதம் முதல் ஒரு ஆண்டு வரை ஆகலாம்.

இணைய தளம் மூலமும் விண்ணப்பிக்கலம்

அந்தந்த கிராம ஊராட்சிகள் மூலம் மற்றும் https://pmaymis.gov.in என்கிற இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம். இணைய தளத்தில் முதலில், சிட்டிசன் அசஸ்மென்ட் (Citizen Assessment) என்பதை க்ளிக் செய்ய வேண்டும். குடிசையில் வசித்தால் குடிசைவாசிகள் என்பதையும். பிற பயனாளர்கள் என்றால், (benefits under other 3 components) என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

இதைத் தொடர்ந்து, ஆதார் அட்டையில் உள்ள விபரங்களை குறிப்பிட வேண்டும். இவை சரியாக இருந்தால், அடுத்த கட்ட இணைப்பு கிடைக்கும். அடுத்த பக்கத்தில் பெயர், வருமானம், குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை, தற்போது வசிக்கும் வீட்டின் எண், குடும்பத் தலைவரின் பெயர் உள்ளிட்ட விபரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

நகர்ப்புறத்தில் வீடு கட்டும் திட்டம்

நகர்ப்புறத்திற்கான இத்திட்டம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. மாநில அளவில் சென்னை தவிர்த்து 16 கோட்ட அலுவலகங்களில், நேரடியாக சென்று 4B விண்ணப்பத்தை பூர்த்தி செய்து BLC திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். கிராமப்புற வீடு கட்டும் திட்டத்திற்கு உள்ளது போலவே, இதற்கும் பயனாளிகளுக்கான தகுதி வரையரை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டம் 3 கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வீட்டு மனை உள்ள பயனாளி மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்றவர்கள். ஆண்டு வருமானம் மூன்று இலட்சம் உள்ளவர்கள், தாங்களாக வீடு கட்டும் திட்டம். இதில் பயனாளி குறைந்தபட்சம் 300 – 500 சதுர அடியில் வீடு கட்ட முடியும். இதற்கு மான்யத்தொகையாக ரூ. 2.10 லட்சம் என நான்கு தவனைகளாக பயனாளியின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.

மேலும் வீட்டின் நான்கு கட்டமும் Basements, Lintal, Roof, Complete ஆனது ISRO வழங்கியுள்ள Geo Tag முறையில் புகைப்படம் எடுக்கப்பட்ட, பின்பே மானிய பணம் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இத்திட்டத்திற்கான, பணி ஆணை (வொர்க் ஆர்டர்) சம்மந்தப்பட்ட நிர்வாகப் பொறியாளர் அல்லது உதவி நிர்வாகப் பொறியாளரிடம் அனுமதி பெற்ற பிறகே கட்டுமான பணிகளைத் தொடங்க வேண்டும். அனுமதி பெறாத வீடுகளுக்கான மானியத்தை பெற முடியாது.

அடுக்கு மாடி குடியிருப்பு திட்டம்

அடுக்குமாடி வீடுகள், இத்திட்டம் ஆனது அரசுக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகளில் இருந்து அகற்றப்படும் பயனாளிகள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கு ஒதுக்கப்படும். இந்த அடுக்கு மாடி குடியிருப்பில் ஒரு குடியிருப்பின் கட்டுமானச்செலவு நகரங்களுக்கு ஏற்ப ரூ 8 லட்சத்தில் இருந்து பதினைந்து லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும். ஆனால் மேற்கண்ட பயனாளிகள் தங்களின் பயனாளி பங்களிப்புத்தொகையாக நான்கில் ஒருபங்கு தொகையை அரசிற்கு செலுத்த வேண்டும்.

நகரப்பகுதிக்கு மட்டுமான மற்றொரு திட்டத்தில், வீட்டு மனை உள்ளவர்கள் வீடு கட்ட வங்கிகளை அணுகும் போது, கடனில் வட்டியில் ரூ. 2.60 லட்சம் வரை வட்டியில், தள்ளுபடி செய்யப்படும்.

Click Here to Join:

Telegram Group link 

WhatsApp Group link

YouTube link

Instagram link 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments