பொங்கல் சிறப்பு பேருந்துகள்… எந்தெந்த ஊர்களுக்கு எங்கிருந்து பேருந்துகள் இயக்கம்.. அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு!!!

தென்மாவட்டங்களுக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற 12ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு மொத்தம் 13,183 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

பொங்கல் திருநாள் அடுத்த வாரம் கொண்டாடப்படும் நிலையில், சென்னை, கோவை உட்பட வெளியூர்களில் பணியாற்றுவோர் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இது தொடர்பாக, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், 12ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறினார். அதன்படி, சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 4,706 சிறப்புப் பேருந்துகள் என 3 நாட்களுக்கு மொத்தம் 11,006 பேருந்துகளும், திருச்சி, கோவை உள்ளிட்ட பிற ஊர்களில் இருந்து 8,478 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

இதன் மூலம், பொங்கல் பண்டிகைக்காக 3 நாட்களுக்கு சென்னை மற்றும் பிற ஊர்களில் இருந்து மொத்தம் 19,484 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், சென்னையில் இருந்து வெளியூர்களுக்குச் செல்ல கோயம்பேடு, கிளாம்பாக்கம் உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

அதன்படி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலம் செல்லும் பேருந்துகள் மாதவரத்தில் இருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே.நகரில் இருந்து இயக்கப்படுகின்றன.

திண்டிவனம், விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சை செல்லும் பேருந்துகள் தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுவதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். ஆற்காடு, ஆரணி, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. விழுப்புரம், மதுரை, கும்பகோணம், சேலம், கோவை, நெல்லை கோட்டங்களைச் சேர்ந்த பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும் என்றும் திருச்சி, தஞ்சை, கரூர், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்தும் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டிசம்பர் 12ஆம் தேதிக்கு முன்பு திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் அரசு விரைவுப் போக்குவரத்து கழக பேருந்துகளில் முன்பதிவு செய்தவர்கள்,
கோயம்பேடுக்கு பதில் கிளாம்பாக்கத்தில் இருந்து உரிய நேரத்தில் பயணம் செய்யலாம். 12 முதல் 14 ஆம் தேதி வரை அரசுப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்வதற்கு முன்பதிவு செய்ய ஏதுவாக கோயம்பேடு, கிளாம்பாக்கம், தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையங்களில் மொத்தம் 11 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், TNSTC அதிகாரப்பூர்வ செயலி மற்றும் www.tnstc.in என்ற இணைதளம் வாயிலாகவும் முன்பதிவு செய்யலாம். மேலும், பேருந்துகள் இயக்கம் குறித்த தகவலை பெறவும், புகார் அளிக்கவும் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை கோயம்பேட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், 9445014450 மற்றும் 9445014436 என்ற தொலைபேசி எண் வழங்கப்பட்டதுள்ளது. அத்துடன், தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பான புகார் அளிக்க 18004256151 என்ற இலவச எண் அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் முடிந்து பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வர 16ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன், 4,830 சிறப்புப் பேருந்துகளும், பிற ஊர்களுக்கு 6,459 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments