கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பிக்க விரும்புவோருக்கு அதற்கான வாய்ப்பு உண்டா? என்ன சொல்கிறார்கள் அதிகாரிகள்? நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களில் யாருக்கெல்லாம் உரிமைத் தொகை கிடைக்க வாய்ப்புள்ளது?
தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளன்று இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் 1.63 கோடி பெண்கள் உரிமைத் தொகைக்கு விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் தேர்வு செய்யப்பட்ட 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை மாதம்தோறும் செலுத்தப்படும்.
இதில் 56 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இவர்களில் பல பெண்கள் தகுதி இருந்தும் தங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.
அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த பலருக்கு உரிமைத் தொகை கிடைக்கப் பெறவில்லை என்ற ஏமாற்றமும் அந்த பெண்களின் குரல்களில் தெரிகிறது.
இந்த நிலையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் அதுகுறித்து மேல் முறையீடு செய்யலாம் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் செப்டம்பர் 18 தேதி முதல் 30 நாட்களுக்குள் இ- சேவை மையம், கோட்டாட்சியர் அலுவலகங்களுக்கு நேரில் சென்று உரிமைத் தொகை பெற மேல்முறையீடு செய்யலாம்.
பிறகு அதிகாரிகள் அந்த விண்ணப்பத்தின் மீது விசாரணை நடத்தி அவை ஏற்றுக் கொல்லப்பட்டதா? இல்லையா என்பதை அறிவிப்பார் என அரசு தெரிவித்திருந்தது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் தங்களது மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்று செப்டம்பர் 18 ஆம் தேதி மேல் முறையீடு செய்யலாம் எனவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி அன்றைய தினம் அரசு விடுமுறை நாள் என்பதையும் பொருட்படுத்தாமல் சிலர் கோட்டாட்சியர் அலுவலகங்களுக்குச் சென்றிருந்தனர்.
அத்துடன், “தகுதி இருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு உரிமைத் தொகை கிடைக்கப் பெறாதவர்கள் கிராம நிர்வாக அலுவலர், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர்கள் விண்ணப்பதாரர்களின் வீட்டுக்கே நேரடியாக சென்று ஆய்வு நடத்தி உண்மைத்தன்மையை உறுதி செய்து மகளிர் உரிமைத் தொகை கிடைக்க முழு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இந்த விண்ணப்ப மேல்முறையீட்டு முகாமிற்கு அதிக அளவில் மக்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஏன் என்றால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு அதற்கான காரணம் தெரியும். ஒரு சிலருக்கு சில குளறுபடிகளால் நிராகரிக்கப்பட்டு இருக்கலாம். அவர்களுக்கு முகாமில் தீர்வு கிடைக்கும்.
இதுவரை மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பிக்காத நபர்கள், புதிதாக விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் ஏதும் அரசின் சார்பில் கொடுக்கப்படவில்லை. உதவி மையங்களுக்கு வருவோரின் தகவல் மட்டும் பதிவு செய்வோம். அரசிடமிருந்து அறிவிப்பு வந்தவுடன் புதிய விண்ணப்பங்கள் திட்டத்தில் சேர்ப்பது குறித்து தெரிவிக்கப்படும்” என்றும் அந்த அதிகாரி கூறினார்.
பிரத்யேக இணையதளம்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகையின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள், அதற்கான தகவல் தெரிந்து கொள்ள ஏதுவாக தமிழ்நாடு அரசின் சார்பில் பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது.
Www.kmut.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பதாரர் பயனாளி என்பதை கிளிக் செய்து உள்ளே செல்ல வேண்டும். ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் பின் (OTP) “ஓடிபி அனுப்ப” என்பதை கிளிக் செய்தால் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு வரும் ஓடிபி எண்ணை உள்ளீடு செய்து விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு மீண்டும் பலர் விண்ணப்பித்துள்ள நிலையில், அவர்கள் சில தளர்வுகள் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தமிழகத்தில் அரசு மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மீண்டும் விண்ணப்பிக்க அரசு சார்பில் மறுவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் மீண்டும் விண்ணப்பித்தவர்களுக்கு, புதிதாக விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்ப நிலை குறித்து அறிய புதிதாக இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த இணையதளத்தில் ஒரே நேரத்தில் பலர் லாக் இன் செய்து அது முடக்கப்பட்டது. தற்போது அதிகாரிகள் அதனை சரி செய்துள்ளனர். எனவே விண்ணப்பத்தார்கள் https://kmutappeal.tnega.org/login.html என்ற இணையதள பக்கத்திற்கு சென்று தங்களின் விண்ணப்ப நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.