கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெற மேலும் 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்து இருப்பதாகவும் தகுதியானவர்களுக்கு வரும் 25 ஆம் தேதி முதல் எஸ்.எம்.எஸ் அனுப்பபடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்து மாதம் தோறும் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்வதற்காக மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் பெற 3 கட்டங்களாக முகாம்கள் நடத்தப்பட்டது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டு அரசு நிர்ணயம் செய்த விதிமுறைகளுக்கு பொருந்தும் வகையில் உள்ளதா என ஆய்வு நடந்தது.
இந்த விண்ணப்பங்கள் அரசிடம் உள்ள தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டு, மற்றும் அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வுகளின் மூலம் சரிபார்க்கப்பட்டு விதிமுறைகளைப் பூர்த்தி செய்த 1.065 கோடி மகளிர் பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை.
விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த எஸ்.எம்.எஸ் விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால் மேசேஜ் பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்ய அறிவுறுத்தப்பட்டது. மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி கடந்த அக்டோபர் மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகைக்கு பல்வேறு தகுதியான குடும்பத் தலைவிகள் கண்டறியப்பட்டு, அக்டோபர் மாதத்திற்கான கூடுதல் பயனாளிகளாக 5,041 பேர் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டனர். உரிமைத்தொகை பெற்றுக்கொண்டவர்களில் இறந்துபோனவர்கள் மற்றும் தகுதியற்றவர்கள் எனக் கண்டறியப்பட்ட 8,833 பெயர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில், மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பயன்பெற11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர்.
திட்டத்தில் தங்கள் பெயரையும் இணைத்துக் கொள்ள வலியுறுத்தி அக்.25 வரை 11.85 லட்சம் பேர் மேல் முறையீடு செய்துள்ளனர் என்று தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேல் முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகள் தொடங்கியதாக கூறப்படுகிறது. பரிசீலனைக்கு பிறகு உரிமை தொகை திட்டத்தில் தகுதியானவர்களுக்கு நவ.25 முதல் எஸ்.எம்.எஸ் அனுப்பபடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது
Click Here to Join: