மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள், நிராகரிக்கப்பட்டவர்கள் என மேலும் சிலர் இந்த மாதம் பயனாளர்களாக இணைக்கப்படுகின்றனர்.

அதிகாலை முதல் நள்ளிரவு வரை குடும்பத்திற்காக உழைக்கும் பெண்களுக்கு எந்த வித அங்கீகாரமோ, பொருட்படுத்தலோ கிடைப்பதில்லை. பெண்களின் உழைப்பை சிறிய அளவிலேனும் அங்கீகரிக்க வேண்டும், பொருளாதார ரீதியாக அவர்கள் தன்னிறைவு பெற்றால் மட்டுமே முழுமையான சுதந்திரம் கிடைக்கும் என்ற நோக்கில் தமிழக அரசு முன்னெடுத்துள்ள முத்தான திட்டம் தான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்.
பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம்!
மாதம் 1000 ரூபாயை பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் இத்திட்டம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் சென்றுள்ளது. இங்கு 1000 ரூபாய் என்றால் அங்கு 2000, 2500 ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. பெண்கள் தங்களுக்கான தனிப்பட்ட செலவுகள், குழந்தைகளின் மருத்துவ மற்றும் கல்விச் செலவுகளை இதைக் கொண்டு ஓரளவு சரிகட்ட முடியும். தமிழகத்தின் நிதி நிலைமை சீரடைந்தால் மற்ற மாநிலங்களை போல் தமிழகத்திலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த தொகை உயரவும் வாய்ப்பு உள்ளது.
தமிழக அரசு மீண்டும் வாய்ப்பு:
ஒரு கோடி பெண்களை இலக்காக கொண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு அறிவித்த பொருளாதாரத் தகுதிப் பட்டியலுக்குள் வரும் அத்தனை பெண்களுக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டதில் செப்டம்பர் மாதம் ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் பேர் பயனாளர்களாக சேர்க்கப்பட்டனர். நிராகரிக்கப்பட்டவர்கள், விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு தமிழக அரசு மீண்டும் வாய்ப்பு வழங்கியது.
மேல்முறையீட்டு மனுக்கள்!
அந்த வகையில் இ சேவை மையம் மூலமாகவும் இதற்காக ஏற்படுத்தப்பட்ட சிறப்பு மையங்கள் மூலமாகவும் சுமார் 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்தனர். பொருளாதார தகுதிப் பட்டியலுக்குள் வந்த போதும் சரியான ஆவணங்களை சமர்ப்பிக்காதவர்கள், விண்ணப்பிக்கத் தவறியவர்கள் ஆகியோர் விண்ணப்பித்தனர். இந்த விண்ணப்பங்கள் அந்தந்த கோட்டாட்சியர்கள் மூலம் பரிசீலிக்கப்பட்டு தகுதியுள்ளவர்கள் பயனாளர்களாக சேர்க்கப்பட்டனர்.

ஒரு கோடியே 14 லட்சம் பேர்!
நவம்பர் மாத நிலவரப்படி புதிதாக 7.35 லட்சம் பேர் புதிதாக பயனாளர்களாக சேர்க்கப்பட்டனர். புதிதாக விண்ணப்பித்தவர்களை தவிர்த்து முதல்முறையே விண்ணப்பம் அளித்து நிராகரிக்கப்பட்டு நவம்பர் மாதம் இணைக்கப்பட்டவர்களுக்கு விடுபட்ட மாதங்களுக்கும் சேர்த்து உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டது. எனவே தற்போது சுமார் ஒரு கோடியே 14 லட்சம் பேர் பயனாளர்களாக இணைக்கப்பட்டுள்ளனர்.
ஜனவரியில் அதிகரிக்கும் பயனாளர்கள் பட்டியல்!
இதில் விடுபட்ட மேலும் சிலரது விண்ணப்பங்கள் தொடர்ந்து பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில் ஜனவரி மாத உரிமைத் தொகை வழங்கப்படும் போது தகுதியுள்ள மேலும் சிலர் பயனாளர்களாக இணைக்கப்பட உள்ளனர். இவர்களில் முதலிலேயே விண்ணப்பம், ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு விடுபட்ட மாதங்களுக்கும் சேர்த்து வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. மற்றவர்களுக்கு இந்த மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் வரவு வைக்கப்படும்.
புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கு வாய்ப்பு!
இது மட்டுமல்லாமல் புதிதாக ரேஷன் அட்டைகள் பெற்றவர்கள், விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்புகள் வழங்கப்படும், அடுத்தடுத்து அவர்கள் விண்ணப்பிக்க வாய்ப்புகள் வழங்கப்படும், தகுதியுள்ளவர்கள் ஒருவர் கூட விடுபடாமல் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை கட்டாயம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.