மகளிர் உரிமைத் தொகை கிடைக்காமல் விடுபட்டு, மீண்டும் விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு இம்மாதம் முதலே உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்தின் கீழ், 1.06 கோடி மகளிா் மாதம் ஆயிரம் ரூபாய் பெற்று வருகிறாா்கள். அத்துடன் உரிமைத் தொகை கோரி, 11.85 லட்சம் போ் விண்ணப்பம் செய்துள்ளனா். இந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய பெரும் பணிச்சுமை வருவாய்த் துறையினருக்கு இருந்து வருகிறது.
தமிழக அரசின் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் கடந்த செப். 15ஆம் தேதி தொடக்கிவைத்தார். மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்துக்காக ஒரு கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் முதல்கட்டமாக ஒரு கோடியே 6 லட்சம் மகளிா் தோ்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதம் ரூ. 1,000 வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
தொடர்ந்து, மகளிா் உரிமைத் தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவா்களில் சுமாா் 11 லட்சம் போ் மேல்முறையீடு செய்திருந்தனா். அவா்களில் 7 லட்சத்து 35 ஆயிரம் போ் தகுதியானவா்களாகக் கண்டறியப்பட்டு அவா்களுக்கும் நவம்பா் மாதம் முதல் மகளிா் உரிமைத் தொகை அளிக்கப்பட்டு வருகிறது.
விண்ணப்பித்து இதுவரை மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களின் விண்ணப்பங்களும் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதிவாய்ந்த மகளிருக்கு இந்த மாதம் முதலே உரிமைத் தொகை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசின் மைல்கல் திட்டமாகக் கருதப்படும் கலைஞா் மகளிா் உரிமை திட்டத்தை சிறப்புடன் செயலாக்க, மாவட்ட அளவில் சமூக பாதுகாப்புத் திட்டப் பிரிவை வலுப்படுத்தும் வகையில் கூடுதலாக பணியாளா்களை நியமித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.