பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், லக்பதி தீதீ திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். லக்பதி தீதி திட்டத்தில் பயனாளிகளின் எண்ணிக்கையானது 2 கோடியில் இருந்து 3 கோடியாக உயர்த்தி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என அவர் கூறினார்.
இதன் மூலம் லக்பதி தீதீ திட்டம் மீது அனைவரின் கவனமும் குவிந்துள்ளது. லக்பதி தீதீ திட்டம் என்றால் என்ன? யாரெல்லாம் இதில் பயன்பெற முடியும் என்பதை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். லக்பதி தீதீ திட்டம் என்றால் என்ன?
கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து அதன் மூலம் அவர்களை லட்சாதிபதியாக்கும் திட்டமே லக்பதி தீதீ திட்டம். மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள் தான் இந்த திட்டத்தின் பயனாளிகள்.
கடந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி “லக்பதி தீதீ” திட்டத்தை அறிவித்தார். நாடு முழுவதும் கிராமப்புற பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கி அவர்களை தொழில்முனைவோராக்கி லட்சங்களில் வருமானம் பெற வைப்பதே அரசின் நோக்கம் என பிரதமர் இந்த திட்டத்தை அறிவிக்கும் போது தெரிவித்தார்.
லக்பதி தீதீ திட்டத்தில் யாரெல்லாம் இணையலாம்: கிராமப்புற பெண்கள் திறன், தொழில் மற்றும் பொருளாதார ரீதியாக மேம்பட வேண்டும், பொருளாதார சுதந்திரத்தை அவர்கள் அடைய வேண்டும் என்பது தான் இந்த திட்டத்தின் இலக்கு. மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாகவே இந்த திட்டம் நிறைவேற்றப்படுகிறது. எனவே மகளிர் சுய உதவிக்குழுக்களில் உறுப்பினராக இருப்பவர்கள் மட்டுமே இதில் இணைய முடியும்.
என்னென்ன பயிற்சிகள் வழங்கப்படும்?: லக்பதி தீதீ திட்டத்தில் கிராமப்புற பெண்களுக்கு மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அந்த பயிற்சியை தொடர்ந்து அவர்கள் தொழில் தொடங்கி ஆண்டுக்கு நிலையான வருமானமான ரூ.1 லட்சத்தை ஈட்ட வேண்டும் என்பது தான் திட்டத்தின் மையக்கருத்து. இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு லெஈடி பல்பு தயாரிப்பு, பிளம்பிங் வேலைகள், துணிகளை தைப்பது, ட்ரோன்களை சரி செய்வது போன்ற தொழில்நுட்ப பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
பயிற்சி குறித்து எப்படி தெரிந்து கொள்வது?: மகளிர் சுய உதவிக்குழுக்களில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் தங்களுக்கு அருகே உள்ள அங்கன்வாடி மையங்களை தொடர்பு கொண்டு பயிற்சி குறித்து அறிந்து கொள்ளலாம் என்கிறது மத்திய அரசு.
ஆதார் , பான், வங்கி கணக்கு புத்தகம், வருமான சான்று, ரேஷன் கார்டு ஆகிய ஆவணங்களை கொண்டு பயிற்சியில் சேர முடியும். தற்போதைக்கு 83 லட்சம் சுய உதவி குழுக்களில் 9 கோடி பெண்கள் இணைந்து கிராமப்புறங்களில் பொருளாதார நிலமைகளை மேம்படுத்தி வருகின்றனர்.
ஏற்கனவே இதன் மூலம் கிட்டத்தட்ட 1 கோடி பெண்கள் லட்சாதிபதி ஆகிவிட்டனர் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் சுட்டிக்காட்டினார். விரைவில் இந்த எண்ணிக்கை 3 கோடியாக மாற வேண்டும் என அவர் கூறியுள்ளார். நீங்கள் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் எனில் உடனே விண்ணப்பம் செய்து பயனடையலாமே.