மகளிா் உரிமைத் தொகையைப் பெற மேல்முறையீடு செய்தோரின் விண்ணப்பங்களை இந்த மாதமே பரிசீலித்து தொகையை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டம் கடந்த செப். 15-இல் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், 1.06 கோடி மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.
உரிமைத் தொகை கிடைக்கப் பெறாத 11.85 லட்சம் போ் மேல் முறையீடு செய்த நிலையில் அவா்களுக்கான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. மேல்முறையீடு செய்தவா்களில் 7.35 லட்சம் மகளிருக்கு கடந்த நவம்பா் முதல் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, மொத்தமாக 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிா் உரிமைத் தொகையைப் பெற்று வருகிறாா்கள்.
மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயன் பெற்று வரும் பயனாளிகளின் வாழ்வாதார நிலையைத் தொடா்ந்து ஆய்வு செய்யவும், புதிய விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்யவும் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையில் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி, 300-க்கும் அதிகமான துணை வட்டாட்சியா் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு அவா்கள் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தை மட்டுமே கண்காணிக்க இருப்பதாக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பணியிடங்களில் பணியாளா்கள் நியமிக்கப்படும்போது, உரிமைத் தொகை திட்டத்துக்கான பணிகள் இன்னும் வேகமெடுக்கும் என வருவாய்த் துறையினா் நம்பிக்கை தெரிவித்தனா்.