மத்தியப் பிரதேசத்தின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மோகன் யாதவ் புதன்கிழமை (டிச.13) பதவியேற்க உள்ளார்.
அவருடன் துணை முதல்வர்கள் ராஜேந்திர சுக்லா மற்றும் ஜெகதீஷ் தேவ்தா ஆகியோரும் டிசம்பர் 13-ஆம் தேதி பதவியேற்க உள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய மோகன் யாதவ், “மத்தியப் பிரதேசத்தின் 8.5 கோடி மக்களின் நம்பிக்கையை பாஜக பெற்றுள்ளது. எங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். பிரதமர் நரேந்திரமோடியின் தலைமையின் கீழ் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம்.
முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தலைமையில் தொடங்கப்பட்ட அனைத்து வளர்ச்சித் திட்டங்களும் எனது ஆட்சியிலும் தொடரப்படும். புதன்கிழமை (டிச.13) பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பிரதமரின் தலைமையில் பாஜக அளித்துள்ள அனைத்து வாக்குறுதிகளையும் மத்தியப் பிரதேசத்தில் நிறைவேற்றுவோம்.” என்று தெரிவித்தார்.
230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டப்பேரவைக்கு கடந்த நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. அதற்கான முடிவுகள் டிசம்பர் 3-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் பாஜக அணி பெரும்பான்மை பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.
இதையடுத்து போபாலில் நேற்று (டிச.11) நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மத்தியப் பிரதேசத்தின் புதிய முதல்வராக மூன்று முறை எம்.எல்.ஏ.வான மோகன் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.