மத்திய அரசு பணியில் சேர விரும்புபவர்களுக்கு 2024ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணையை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது.
கால்காசு வேலை என்றாலும் கவர்மெண்ட் வேலை பார்க்க வேண்டும் என்றுதான் பலரும் விரும்புவார்கள். பத்தாம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் போட்டி தேர்வு எழுதிததான் அரசாங்க வேலைக்கு செல்கின்றனர். தமிழக அரசு பணிக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் எழுதினால் மத்திய அரசு பணிக்கு எஸ்எஸ்சி, யுபிஎஸ்சி தேர்வுகளை எழுத வேண்டும்.
டிஎன்பிஎஸ்சி சமீபத்தில் 2024ஆம் ஆண்டிற்காக தேர்வு நடைபெறும் காலண்டரை வெளிட்டது. அதேபோல மத்திய அரசும் அடுத்த ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி 2024ம் ஆண்டில் மத்திய அரசுத் துறைகளுக்கு 12 வகையான பணிகளுக்கு போட்டித் தேர்வுகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது.
Selection Post Examination, Phase-XII, 2024 :
எஸ்எஸ்சி சார்பில் பிரிவு XII/2024/ பதவிகளுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பு 2024ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி வெளியிடப்படும் . பிப்ரவரி 28ம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்படும். ஏப்ரல்- மே மாதங்களில் இதற்கான முதல்நிலைத் தேர்வு நடைபெறும். இந்த ஆள்சேர்க்கையின் கீழ், பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், மத்திய அரசு நிறுவனங்கள் ஆகியவற்றில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறப்படுகிறது.
சார் – ஆய்வாளர் பணி (Sub-Inspector in Delhi Police, Central Armed Police Force Exam):
டெல்லி காவல் துறை, மத்திய ஆயுதக் காவல் படை ஆகியவற்றில் உள்ள சார் – ஆய்வாளர் (Sub-Inspector) 2024 பணியிடங்களுக்கான அறிவிப்பு வரும் பிப்ரவரி மாதம் 15ம் தேதி வெளியிடப்படும். மார்ச் 14ம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்படும். 2024 மே-ஜூன் மாதங்களில் இதற்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு நடைபெறும்.
இளநிலை பொறியாளர் தேர்வு (Junior Engineer Examination, 2024):
இளநிலை பொறியாளர் [சிவில், இயந்திரவியல், மின்சாரவியல் மற்றும் அளவு மதிப்பீடு & ஒப்பந்தங்கள் தேர்வு, 2024 காலிப்பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பு எதிர்வரும் பிப்ரவரி மாதம் 29ம் தேதி வெளியிடப்படும். இணையதளம் வாயிலாக மார்ச் 29ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். மே, ஜூன் மாதங்களில் இதற்கான முதல்நிலைத் எழுத்துத் தேர்வு நடைபெறும்.
ஒருங்கிணைந்த மேல்நிலை (10 + 2) அளவிலான தேர்வு (முதல்நிலை) 2024 – Combined Higher Secondary (10+2) Level Examination (Tier-I) 2024:
ஒருங்கிணைந்த மேல்நிலை (10 + 2) அளவிலான தேர்வு (முதல்நிலை) 2024 அறிவிப்பு வரும் ஏப்ரல் மாதம் 2ம் தேதி வெளியிடப்படும். இணையதளம் வாயிலாக மே மாதம் 1ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். ஜூன் -ஜுலை மாதங்களில் இதற்கான முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பன்னோக்கு (தொழில்நுட்பம் சாராத) பணியாளர் தேர்வு 2024 (Multi Tasking non technical staff):
2024ம் ஆண்டுக்கான பன்னோக்கு (தொழில்நுட்பம் சாராத) பணியாளர் தேர்வு அறிவிப்பு எதிர்வரும் மே மாதம் 7ம் தேதி வெளியிடப்படும். இணையதளம் வாயிலாக ஜூன் மாதம் 6ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். ஜுலை- ஆகஸ்ட் மாதங்களில் இதற்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு நடைபெறும்.
சுருக்கெழுத்தாளர் நிலை சி & டி தேர்வு 2024:
2024ம் ஆண்டுக்கான சுருக்கெழுத்தாளர் சி & டி நிலைத் தேர்வு பணியிடங்களுக்கான அறிவிப்பு ஜுலை மாதம் 16ம் தேதி வெளியிடப்படும். ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்படும். அக்டோபர், நவம்பர் மாதம் இதற்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு நடைபெறும்.
ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வு (COMBINED GRADUATE LEVEL EXAMINATION, 2024):
2024ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வு அறிவிப்பு வரும் ஜூன் மாதம் 11ம் தேதி வெளியிடப்படும். இணையதளம் வாயிலாக ஜுலை 10ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். செப்டம்பர். அக்டோபர் மாதங்களில் இதற்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவலர் நிலை பணி (Constable (GD) in CAPF & Assam Rifle):
2025ம் ஆண்டுக்கான மத்திய ஆயுதக் காவல்படை (சி ஏ பி எஃப்) மற்றும் அசாம் ரைபிள் ஆகியவற்றில் காவலர் நிலையில் உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி வெளியிடப்படும்.செப்டம்பர் மாதம் 27ம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்படும். 2024 டிசம்பர்- 2025 ஜனவரி மாதங்களில் இதற்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.