இன்று இரவு முதல் நாளை மாலை வரை கனமழை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக அதிக மழை இன்று இரவு முதல் நாளை மாலை வரை பெய்யக் கூடும்.
பொதுவாக வடகிழக்கு பருவமழையானது அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில்தான் இருக்கும். ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக ஜனவரியிலும் பருவமழை தொடர்கிறது. கிங்மேக்கர் எம்ஜேஓ கடலோரத்தில் இருப்பதால் இந்த ஆண்டும் ஜனவரியில் வடகிழக்கு பருவமழை பெய்யும்.
கடந்த இரு நாட்களாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும். விருதுநகர் மாவட்டம் மற்றும் மாஞ்சோலை பகுதிகளில் கனமழை பெய்து வருவதாக தகவல்கள் வந்துள்ளன. டெல்டா மாவட்டங்களில் கூட அதிக மழை பெய்கிறது. தென் தமிழகம் மற்றும் மேற்கு தமிழகத்தில் அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும். அப்போது எங்குதான் மிக கனமழை பெய்யும் என கேட்கிறீர்களா
மாஞ்சோலையை விடுங்கள், அங்கு சும்மாவே பெய்யும். நான் சொல்வது நம்ம சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை பற்றிதான். குறைந்த காற்றழுத்தமோ அல்லது புயலோ இல்லாத சமயங்களில் இது போன்ற மழை மிகவும் அரிது. கடந்த 2021 ஆம் ஆண்டு, நவம்பர் 21 ஆம் தேதியோ கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதியோ பெய்ததை போல் தற்போது பெய்யும்.
இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று வானிலை மிகவும் அருமையாக இருந்தது. எனவே மேற்கொண்ட மாவட்டங்களில் இன்று இரவு முதல் நாளை மாலை வரை மழை பெய்யும். இந்த மாவட்டங்களில் 75 மி.மீ. முதல் 150 மி.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே வேளையில் 150 முதல் 250 மி.மீ அளவுக்கு அதீத மழைக்கும் வாய்ப்புள்ளது.
கடலோர மாவட்டங்களான விழுப்புரம் மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டம், ராணிப்பேட்டை, டெல்டா மாவட்டங்கள், கடலூர், பாண்டிச்சேரியிலும் இன்று இரவு முதல் நாளை மாலை வரை மழை பெய்யும். ஆனால் மிக்ஜாம் புயலில் ஏற்பட்டது போல் வெள்ளம் வராது, அஞ்ச வேண்டாம். டிசம்பரிலேயே நாம் 24 மணி நேரத்தில் 400- முதல் 500 மி.மீ. மழையை பெற்றுவிட்டோம். எனவே இன்று இரவு பெய்யும் மழை மிக்ஜாம் புயலை போல் இருக்காது. ஆனாலும் 100 முதல் 200 மி.மீ. மழை பெய்தாலே சில இடங்களில் தண்ணீர் தேங்குகிறது.
மேகக் கூட்டங்களை பார்த்தால் 100 மி.மீ ருக்கு குறையாமல் மழை பெய்யும் . அல்லது 200 மி.மீ மழை அளவைக் கூட தொடும். ஜனவரியில் மழைக்காக பள்ளிகளுக்கு விடுமுறை என்பது மிகவும் அரிதாகும். ஆனால் இந்த முறை பள்ளிகளுக்கு விடுமுறை கிடைத்தாலும் கிடைக்கும். கடந்த ஆண்டு ஜனவரியிலேயே அவர்களுக்கு விடுமுறை கிடைத்தது.
மழை பெய்வது ஏன் தெரியுமா? தமிழகத்திலிருந்து வரும் கிழக்கு காற்றும் மேற்கு காற்றும் ஒன்றாக சந்தித்துக் கொள்கிறது. இதனால்தான் வடதமிழகம், தெற்கு ஆந்திரா ஆகியவை ஹாட்ஸ்பாட்டுகளாக உள்ளன. இன்று இரவு பெய்யும் மழை திருப்பதி அல்லது சித்தூருக்கும் கிடைக்கும். இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.