முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம்கள் கோவை மாவட்டத்தில் இன்று முதல் தொடங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒரு குடும்பம் ஒரு ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை கட்டணமின்றி சிகிச்சை பெற முடியும்.
கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: கோவை மாவட்டத்தில் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. ஏழை மற்றும் குறைந்த வருவாய் பெறும் பொதுமக்கள் உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளை கட்டணமில்லாமல் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெற வேண்டும் என்ற உயரிய நோக்குடன், உயிர்காக்கும் உயிர் சிகிச்சைக்கான முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒரு குடும்பம் ஒரு ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை கட்டணமின்றி சிகிச்சை பெறலாம். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் 300-க்கும் மேற்பட்ட நோய்களுக்கு கட்டணமின்றி சிகிச்சை பெறலாம். கோவை மாவட்டத்தில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யும் முகாம் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தொடர்ந்து 4 வாரங்கள் வரை நடைபெறவுள்ளது.
சூலூர் பேரூராட்சியில் வார்டு எண்- 4, 5, 6, 7 ஆகிய இடங்களில் இன்றும், வார்டு எண்- 1, 2, 3, 8, 9 ஆகிய இடங்களில் நாளையும், வார்டு எண்- 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 ஆகிய இடங்களில் நாளை மறுநாளும் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.
பொள்ளாச்சி நகராட்சி: பொள்ளாச்சி நகராட்சியில் 1, 2, 3 ஆகிய வார்டு பகுதியில் நாளையும், 29, 30, 33 ஆகிய வார்டு பகுதியில் நாளை மறுநாளும், 20, 21, 25 ஆகிய வார்டுகளில் 12-ந் தேதியும் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு சிறப்பு முகாம் நடைபெறும். இதேபோல் ஆனைமலை பேரூராட்சியில் 10-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
இந்த முகாம்களில் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு அட்டை பெற பொதுமக்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மேலும் மகளிர் சுய உதவிக்குழுக்கான பதிவுகள் மற்றும் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடனுதவிகள் வழங்குவதற்கும் இம்முகாம்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே இந்த சிறப்பு முகாமினை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்” இவ்வாறு கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.