
முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் என்பது தமிழக அரசின் நேரடி முதலீட்டின் கீழ் பெண் குழந்தைகளுடைய உரிமைகளை பாதுகாக்க, பாலின பாகுபாட்டை தடுக்க உருவாக்கப்பட்ட ஒரு திட்டம். தமிழகத்தில் தற்போது இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், பெண் குழந்தைகளுக்கு 50,000 ரூபாய் வரை தமிழக அரசு வழங்கி வருகிறது.
ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை இருக்கும் பட்சத்தில் அவருக்கு 25 ஆயிரம் ரூபாயும், இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் 50,000 ரூபாயும் அந்த பெண் குழந்தைகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த வைப்பு தொகையானது புதுப்பிக்கப்படுகிறது, அந்த பெண் குழந்தைக்கு 18 வயது நிரம்பிய பிறகு, அதுவரை வரவு வைக்கப்பட்ட நிதியானது வட்டியுடன் சேர்த்து முழு தொகையாக வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் சேர 1.8.2011 அன்று அல்லது அதற்கு பிறகு பிறந்த பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம். இந்த உதவித்தொகையை பெற பெற்றோர்கள் வருகின்ற அக்டோபர் மாதம் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
விண்ணப்பிக்க பெற்றோர்களுக்கான தகுதி என்ன?
தமிழகத்தை சேர்ந்த 35 வயதிற்கு உள்ளே உள்ள பெற்றோர் தமிழக அரசாங்க மருத்துவமனையில் கருத்தடை செய்திருந்தால் இந்த சலுகையை பயன்படுத்த அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். அதேபோல ஆண் வாரிசுகள் இல்லாமல் பெண் குழந்தைகள் மட்டுமே இருக்கும் பெற்றோர்களும் இந்த முதலமைச்சர் குழந்தைகள் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். மேலும் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?
பெற்றோர்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் உள்ள சமூக நல விரிவாக்க பிரிவு அதிகாரிகளிடம் நேரடியாக சென்று வருகின்ற அக்டோபர் 25ஆம் தேதிக்குள் முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். அல்லது இ-சேவை மையங்கள் மூலம் கூட இதற்காக பெற்றோர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேவைப்படும் ஆவணங்கள்?
பெற்றோரின் ஆதார் கார்டு, பெற்றோரின் குடியிருப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், சாதிச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் மொபைல் எண் இருந்தால் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.