முத்ரா திட்டம் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாகும், இது கோடிக் கணக்கானவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது மற்றும் தொழில்முனைவோரை வளர்க்கிறது என்று பிரதமர் மோடி தமிழில் ட்வீட் பதிவிட்டுள்ளார்.
முத்ரா யோஜனா திட்டம், கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி பிரதமர் மோடி துவக்கி வைத்தார். யாருக்கெல்லாம் தொழில் தொடங்க விருப்பமோ அவர்களுக்கு மத்திய அரசு நிதியுதவியை வழங்குவதுதான் முத்ரா திட்டம். அந்த வகையில், கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாய் வரை இந்த திட்டத்தின்கீழ் கடன் பெறலாம். மத்திய அரசு இந்த கடன் உதவியை பொதுமக்களுக்கு வழங்க காரணம், வேலைவாய்ப்பு இன்மையை இந்தியாவிலிருந்து நீக்கும் நோக்கத்தில்தான்.
அது மட்டுமல்ல, சாமான்ய மக்களும் தொழில் முனைவோராக உயரலாம்.. அத்துடன், சிறு வணிகர்களும் தங்களது நிதி தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு, தங்கள் தொழிலையும் விரிவுபடுத்தி கொள்ளலாம். மொத்தம் 3 வகைகளில், இந்த திட்டத்தின்கீழ் கடன் வழங்கப்படுகிறது. இந்த 3 வகைகளிலுமே வேறு வேறு கடன் வசதிகள் இருக்கின்றன. குறிப்பாக, “சிஷு” (Shishu) என்ற திட்டத்தின் கீழ் ரூ.50,000 வரையில் கடன் தரப்படுகிறது.
“கிஷோர்” என்ற திட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரையும், “தருண்” என்ற திட்டத்தின் மூலம், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கடன்கள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில், 44 கோடிக்கும் மேலான பிணையமில்லா முத்ரா யோஜனா கடன்கள் கோடிக்கணக்கான தொழில்முனைவோரை மேம்படுத்தியுள்ளன, இவர்களில் 70 சதவீதமானவர்கள் பெண்கள். வேலை தேடுபவர்கள் இப்போது வேலையை உருவாக்குகிறார்கள்.
இது மோடியின் உத்தரவாதம் என பாஜக தனது சமூக வலைத்தள பக்கங்களில் கூறியிருந்தது. இந்த எக்ஸ் தள பதிவுக்கு பிரதமர் மோடி தமிழில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:- முத்ரா திட்டம் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாகும், இது கோடிக்கணக்கானவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது மற்றும் தொழில்முனைவோரை வளர்க்கிறது. அதிக எண்ணிக்கையிலான பயனாளிகள் பெண்கள், எஸ்சி/எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினர் என்பது குறிப்பிடத்தக்கது” என்று கூறியுள்ளார்.