ரயில்வே மருத்துவமனைகளில், ஒப்பந்த அடிப்படையில் புதிதாக உதவியாளர்களை நியமிக்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரயில்வே நிர்வாகத்தால் நடத்தப்படும் மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 202 உதவியாளர்களுக்கு பணி நிரந்தரம் கோரி தட்சிண ரயில்வே ஊழியர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த மத்திய நிர்வாக தீர்ப்பாயம், கோரிக்கையை நிராகரித்து, கடந்த டிசம்பர் 19ம் தேதி உத்தரவிட்டது.
ரயில்வே நிர்வாகத்தால் நடத்தப்படும் மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 202 உதவியாளர்களுக்கு பணி நிரந்தரம் கோரி தட்சிண ரயில்வே ஊழியர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த மத்திய நிர்வாக தீர்ப்பாயம், கோரிக்கையை நிராகரித்து, கடந்த டிசம்பர் 19ம் தேதி உத்தரவிட்டது.
இதற்கிடையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி நியமன உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவர்களை பணி நியமனம் செய்ய தடை விதிக்க வேண்டும் என தட்சிண ரயில்வே ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதிகள் சுரேஷ் குமார் மற்றும் குமரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, 202 ஊழியர்களுக்கு பதிலாக புதிய ஒப்பந்த ஊழியர்களை நியமித்தால், அது இந்த வழக்கை பயனற்றதாக்கி விடும் என்பதால், புதிதாக ஊழியர்களை நியமிக்க தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் சங்கத்தின் தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில்வே நிர்வாகம் தரப்பில், மனுதாரர் சங்க உறுப்பினர்களின் நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு பதில் நியமிக்கப்பட உள்ளவர்களின் தேர்வு நடவடிக்கைகள் 2023ம் ஆண்டு மார்ச் மாதமே துவங்கி விட்டது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.
பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்ற மனுதாரர்கள் கோரிக்கையை மத்திய நிர்வாக தீர்ப்பாயம் நிராகரித்துள்ளதால், அவர்களை நீக்கி விட்டு, புதிய ஒப்பந்த ஊழியர்கள் 60 நாட்களுக்கு என்ற அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ரயில்வே நிர்வாகம் தரப்பில் முன் வைக்கப்பட்ட இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்ற உத்தரவை ரயில்வே நிர்வாகம் மீறியுள்ளதாக சுட்டிக்காட்டினர்.
புதிய ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்க இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், மருத்துவமனைகளில் உதவியாளர்கள் பற்றாக்குறை இருந்தால், அந்த இடங்களில், மனுதாரர் சங்க உறுப்பினர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், அப்படி மறுநியமனம் வழங்கினால், அதன் மூலம் அவர்களுக்கு எந்த உரிமையும் கோர முடியாது என உத்தரவிட்டனர்.
மேலும் இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, ரயில்வே நிர்வாகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை பிப்ரவரி மூன்றாவது வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.