அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் சான் ஃபிரான்சிஸ் நகருக்கு வெளியே நேரடியாகச் சந்தித்தனர். ஆசிய-பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு மாநாட்டின் உச்சநிலைக் கூட்டத்தை ஒட்டி இச்சந்திப்பு நிகழ்ந்தது
உட்சைட் (அமெரிக்கா): இருநாட்டு அதிபர்களின் நேரடி தொலைபேசிச் சேவையைத் தொடங்கவும் இருநாட்டு ராணுவத்திற்கு இடையிலான தகவல் தொடர்பு வசதிகளை மீண்டும் ஏற்படுத்தவும் அமெரிக்க, சீன அதிபர்கள் ஒப்புக்கொண்டு உள்ளனர்.
அத்துடன், உடல்நலத்துக்கு ஒவ்வாத ஃபென்டானில் மருந்தின் உற்பத்தியைத் தடுக்க இணைந்து பணியாற்றவும் திரு ஜோ பைடனும் திரு ஸி ஜின்பிங்கும் நேரடியாகச் சந்தித்தபோது ஒப்புக்கொண்டனர்.
சுமார் நான்கு மணி நேரம் நீடித்த அந்தச் சந்திப்பு சான் ஃபிரான்சிஸ் நகரை ஒட்டிய பகுதியில் நடைபெற்றது. அவ்விரு தலைவர்களும் ஓராண்டில் நேரடியாகச் சந்தித்த முதல் நிகழ்வு அது. ஆசிய-பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு மாநாட்டின் உச்சநிலைக் கூட்டத்தை ஒட்டி இச்சந்திப்பு நிகழ்ந்தது.
அமெரிக்க-சீன உறவுகளைப் பாதிக்கக்கூடிய பிரச்சினைகள் பற்றி இருவரும் கலந்து ஆலோசித்தனர். இருப்பினும், தைவான் விவகாரம் உள்ளிட்ட சில பிரச்சினைகளில் இரு நாட்டுக்கும் இடையில் கருத்து வேறுபாடு தொடருகிறது.
அதேநேரம், முக்கிய திருப்பமாக, சீனா முறித்துக்கொண்ட இருநாட்டு ராணுவத் தொடர்புகளை மீட்டெடுக்க அமெரிக்க-சீன அரசாங்கங்கள் திட்டமிட்டு உள்ளன.
கடந்த 2022 ஆகஸ்ட்டில் அப்போதைய அமெரிக்க நாடாளுமன்ற நாயகர் நேன்ஸி பெலோசி தைவானுக்குச் சென்றதைத் தொடர்ந்து அமெரிக்காவுடனான ராணுவத் தொடர்பை சீனா முறித்துக்கொண்டது.
அமெரிக்காவும் சீனாவும் மீண்டும் நேரடியாகத் தொடர்புகொள்ளும் என்று திரு பைடன் தெரிவித்தார். மேலும் உயர்மட்டத் தொடர்புகளைப் பராமரிக்க திரு பைடனும் திரு ஸியும் ஒப்புக்கொண்டனர்.
நானும் திரு ஸியும் தொலைபேசியில் நேரடியாகப் பேசிக்கொள்வோம். பேசவேண்டியவற்றை உடனடியாக தொலைபேசி வழி தொடர்புகொண்டு பேசுவோம்,” என்றார் திரு பைடன்.
இவ்வாறு சாதகமாக செய்தியாளர்களிடம் பேசினாலும் சீனாவுக்கு எரிச்சல் ஏற்படுத்தலாம் என்று கருதக்கூடிய ஒரு கருத்தையும் திரு பைடன் வெளியிட்டார். திரு ஸி ஒரு சர்வாதிகாரி என்று தாம் தெரிவித்த கருத்துக்கு அவர் விளக்கம் அளித்தார்.
“கம்யூனிஸ்ட் நாட்டை வழிநடத்தக்கூடியவர் என்கிற அடிப்படையில் அவர் ஒரு சர்வாதிகாரி என்பது என்னுடைய கருத்து,” என்றார் அவர்.
Click Here to Join: