விவசாய விளைபொருள்களை நியாயமான விலையில் விற்பதே பெரும் சவாலாக இருக்கிறது. இந்த நிலையில் அறுவடைக்குப் பின்னர், விளைபொருள்களை சேமித்தல், மதிப்புக்கூட்டுதல் நடவடிக்கைக்காக அரசு நிதியுதவி அளித்து வருகிறது.
அந்த வகையில் வேளாண் உள்கட்டமைப்பு நிதித் திட்டத்தின்கீழ் (Agriculture Infrastructure Fund) கடன் உதவி பெறும் திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2020 -21-ல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், 2032-33 வரை செயல்பாட்டில் இருக்கும்.
இந்தத் திட்டத்தின் கீழ் யாரெல்லாம் பயன்பெறலாம், எவ்வளவு கடன் பெற முடியும் என்பது குறித்த தகவல்களைக் காண்போம்…
* 2 கோடி வரை விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் கடன்பெற முடியும். ஏழு ஆண்டுக் காலத்துக்கு 3 சதவிகித வட்டி குறைக்கப்படும்.
* கடன் தவணையைத் திருப்பிச் செலுத்த இரண்டு ஆண்டுகள் விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக 7 ஆண்டுகளுக்குள் விவசாயிகள் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த வேண்டும்.
* இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகள், விவசாய குழுக்கள், உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள், பெண் தொழில்முனைவோர், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், வேளாண் தொழில் முனைவோர் பயன்பெற முடியும்.
* வெவ்வேறு இடங்களில் திட்டங்களைச் செயல்படுத்த தகுதியுள்ள நிறுவனங்களின் திட்டங்கள் (project) அனைத்துக்க்கும் 2 கோடி ரூபாய் வரை கடன் பெற முடியும்.
* விவசாயிகள், வேளாண் தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் போன்ற தனியார் துறை நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக 25 திட்டங்களுக்கு வரம்பு இருக்கும்.
அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை திட்டங்கள்:
இந்தத் திட்டத்தின் மூலம் சேமிப்புக் கிடங்குகள், சேமிப்புக் கலன்கள், பேக்கிங் கட்டடங்கள், சிப்பம் கட்டும் கூடங்கள், மின்னணு சந்தையுடன்கூடிய விநியோகத் தொடர் சேவை, தரம் பிரிப்பு மற்றும் வகைப்படுத்தும் இயந்திரங்கள், குளிர்பதன வசதிகள், முதன்மை பதப்படுத்தும் மையங்கள், பழுக்க வைக்கும் அறைகள், ரீஃபர் வேன் மற்றும் இன்சுலேட்டட் வாகனங்கள், பண்ணைக் கழிவுகள் அல்லது கழிவு மேலாண்மை உள்கட்டமைப்புகள் போன்ற வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
* மேலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், சுய உதவிக்குழுக்கள், கூட்டுப் பொறுப்புக் குழுக்கள், மாநில கூட்டுறவு விற்பனை சங்கங்கள், பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள், மத்திய அல்லது மாநில உள்ளாட்சி அமைப்புகளால் முன்மொழியப்படும் அரசு, தனியார் அமைப்புகள், வேளாண் விளைபொருள்கள் விற்பனைக் குழுக்கள், தேசிய மற்றும் மாநில கூட்டுறவு கூட்டமைப்புகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்புகள் இந்தத் திட்டத்தின் மூலம் கடன் பெறலாம்.
இத்திட்டம் குறித்த கூடுதல் தகவல்களை அறியவும், இதன் மூலம் பயன்பெறவும் www.agriinfra.dac.gov.in இணையதளத்தை அணுகலாம்.