பொது மக்களின் சேமிப்பு பழக்கத்தினை ஊக்குவிக்கும் நோக்கிலும், ஒரு வருவாய் ஆதாரத்தை வழங்கும் நோக்கிலும் இந்திய அஞ்சல் துறை பல்வேறு முதலீட்டு சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது.

இப்பொழுது வளர்ந்து வரும் சூழ்நிலையிலும் பொருளாதார நெருக்கடி நம் பிள்ளைகளையும் மற்றும் நம் ஓய்வு கால நேரங்களிலும் நாம் பிரச்சனைகளிலிருந்து விடுபட இப்பொழுதே சரியான முறையில் சேமிப்பை தொடங்குவது மிகவும் அவசியமான ஒன்றாகும் ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் சேமிப்பு என்பது நடுத்தர மக்களுக்கு மிகவும் சாவாலான ஒன்று அப்படி நாம் சேமிக்கும் பணத்தை மிகவும் சரியான மற்றும் லாபம் தரக் கூடிய சேமிப்பு திட்டத்தில் சேமிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
பாதுகாப்பான மற்றும் காப்பீடு செய்யப்பட்ட பல்வேறு வட்டி விகிதத்தில் முதலீட்டு தேர்வுகளை அஞ்சல் அலுவலகம் வழங்குகிறது. சில சேமிப்பு திட்டங்களுக்கு வருமான வரி விலக்கும் கிடைக்கிறது. சேமிப்பு கணக்கு, பி.பி.எஃப். மற்றும் கிசான் விகாஸ் பத்திரம் உள்ளிட்ட 9 வகையான அஞ்சலக சேமிப்பு திட்டங்களை பார்ப்போம்.
1.அஞ்சலக சேமிப்பு கணக்கு: பெரும்பாலான மக்கள் அஞ்சலக சேமிப்பு கணக்கு தொடங்கி முதலீடு செய்து வருகின்றனர். இதில் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 4 சதவீதம் வட்டி கிடைக்கும். வட்டி வருவாய் வரி விதிப்புக்கு உட்பட்டது. மற்றும் டி.டி.எஸ். விலக்கு கிடையாது.
2.5 ஆண்டு கால அஞ்சல் அலுவலக தொடர் வைப்பு கணக்கு (ஆர்.டி.): குறைந்தபட்சம் மாதம் ரூ.100 பங்களிப்பில் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்த சேமிப்புக்கு காலாண்டுக்கு ஒரு முறை 6.5 சதவீதம் வட்டி பெறுவார்கள்.
3.1 முதல் 5 ஆண்டு கால டெபாசிட்: இதனை வங்கியின் நிலையான வைப்புத்தொகையுடன் ஒப்பிடலாம். வட்டி ஆண்டுதோறும் செலுத்தப்பட்டாலும் அது காலாண்டுக்கு ஒரு முறை கணக்கிடப்படுகிறது. 1 மற்றும் 2, 3 மற்றும் 5 ஆண்டுகளுக்கான சேமிப்புகளுக்கு 2023-24ம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டுக்கான விகிதங்கள் முறையே 6.9 சதவீதம், 7 சதவீதம் மற்றும் 7.5 சதவீதமாகும்.
4. 5 ஆண்டு கால டெபாசிட்: ஆண்டுக்கு 7.40 சதவீத வட்டி மூலம் வழக்கமான மாதாந்திர வருமானத்துடன் குறைந்த ரிஸ்க் உள்ள முதலீடு திட்டத்துக்கு ஐந்தாண்டு லாக் இன் காலம் உள்ளது.

5.மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்: இது மத்திய அரசு ஆதரவு பெற்ற திட்டமாகும். இந்த திட்டத்தின்கீழ் மூத்த குடிமக்கள் ஒரே சமயத்தில் முழு தொகையையும் டெபாசிட் செய்ய அனுமதிக்கிறது. இந்த டெபாசிட் திட்டத்துக்கு காலாண்டுக்கு ஒரு முறை வட்டி செலுத்தப்படுகிறது. 2023 டிசம்பர் காலாண்டுக்கு இந்த திட்டத்துக்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
6.15 ஆண்டு கால பொது வருங்கால வைப்புநிதி கணக்கு(பி.பி.எஃப்.): இது பிரிவு 80சி-ன் கீழ் ஒரு நிதியாண்டில் ரூ.1.5 லட்சம் வரை வருமான வரி விலக்குகளுடன் கூடிய பிரபலமான முதலீடு மற்றும் ஓய்வூதிய திட்டமாகும். பி.பி.எஃப். வரி இல்லாத ஆண்டுக்கு 7.1 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
7.தேசிய சேமிப்பு சான்றிதழ் (என்.எஸ்.சி.): 5 ஆண்டு கால தேசிய சேமிப்பு சான்றிதழ் ஆண்டுக்கு 7.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் கூட்டப்பட்டு, முதிர்வின்போது வழங்கப்படும்.
8.கிசான் விகாஸ் பத்திரம்: கிசான விகாஸ் பத்திரம் திட்டத்தில் முதலீடு செய்தால் உங்கள் முதலீடு 123 மாதங்களில் இரட்டிப்பாகும். தற்போது இந்த முதலீடு திட்டத்துக்கு ஆண்டுக்கு 7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
9.சுகன்யா சம்ரிதி கணக்குகள்: 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்காக அறிமுகப்படுத்த முதலீட்டு சேமிப்பு திட்டம் இது. இந்த திட்டத்துக்கு ஆண்டுக்கு 8 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் வட்டி கணக்கிடப்பட்டு ஆண்டுதோறும் கூட்டப்படுகிறது.

இந்த அஞ்சல் அலுவலக வைப்புத் திட்டங்கள் முதலீட்டாளர்களுக்கு அவர்களது இடர் சகிப்புத்தன்மை மற்றும் நிதி நோக்கங்களுக்கு ஏற்ற பாதுகாப்பான மற்றும் மாறுபட்ட தீர்வுகளை வழங்குகின்றன. அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு காலாண்டுக்கு ஒரு முறை நிர்ணயம் செய்கிறது. இந்த திட்டங்கள் முதலீட்டாளர்களுக்கு நிலையான வளர்ச்சிக்கு உத்தரவாதம் வழங்குகிறது.
Click Here to Join: