169 ஆண்டுகள் தொன்மையான வரலாறு கொண்ட இந்திய அஞ்சல் துறை என்பது கடிதப் போக்குவரத்திற்கானது மட்டுமல்ல. நிறைய சேமிப்புத் திட்டங்களையும் அஞ்சல் துறை வழங்குகிறது. இதில் பெரும்பாலான சேமிப்புத் திட்டங்கள் வங்கிகள் தரும் வட்டியைவிட கூடுதல் வட்டி தரக்கூடியவை.
குறிப்பாக பெண்களாக, மூத்த குடிமக்களாக இருந்தால் அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள் உங்களுக்கு மிகவும் பயன் தரக்கூடியவை.
அந்த வகையில், இந்திய அஞ்சல் அலுவலகங்களில் உள்ள முக்கிய சேமிப்புத்திட்டங்கள் குறித்து பார்ப்போம்.
தேசிய சேமிப்பு கால வைப்பு (National Savings Time Deposit)
வங்கிகளில் உள்ள நிலையான வைப்பு திட்டம் போன்றதே இந்த தேசிய சேமிப்பு கால வைப்பு திட்டம்.
வங்கிகளில் Fixed Deposit என அழைக்கப்படும் இந்த முறை அஞ்சல் அலுவலகங்களில் Time Deposit என அழைக்கப்படும்.
இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் ஓராண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை பணத்தை முதலீடு செய்யலாம்.
குறைந்தபட்சமாக ஓராண்டுக்கு 6.9% சதவீத வட்டியும், அதிகபட்சமாக 5 ஆண்டுகள் கால வைப்பிற்கு 7.5% சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு காலாண்டிற்கும் வட்டி கணக்கீடு செய்யப்பட்டு, ஆண்டு முடிவில் அஞ்சலக சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்படும்.
தேசிய சேமிப்பு கால வைப்பில் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் வருமான வரிச்சட்ட பிரிவு 80சி-ன் கீழ் ரூ.1.5 லட்சம்வரை வரி விலக்கு பெறலாம்.
இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் ருபாய் முதலீடு செய்தால் 5 ஆண்டுகள் கழித்து உங்கள் கையில் 1,37,500 ரூபாய் இருக்கும்.
வங்கிகள் இதைவிட குறைவான வட்டியே அளிப்பதால் நிரந்த வைப்பில் தங்கள் பணத்தை முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு இந்த தேசிய சேமிப்பு கால வைப்புத் திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.
தேசிய சேமிப்பு மாதாந்திர வருமான திட்டம் (National Savings Monthly Income Scheme)
தேசிய சேமிப்பு மாதாந்திர வருமான கணக்கு என்பது மாதாமாதம் வட்டி தரக்கூடிய சேமிப்புத் திட்டம்.
7.4% வட்டி தரப்படும் இந்தத் திட்டத்தில் ஒருவர் அதிகபட்சமாக 9 லட்சம் வரை முதலீடு செய்யலாம். அதுவே கூட்டுக்கணக்காக இருந்தால் 15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தின் கால அளவு 5 ஆண்டுகள்.
ஒருவேளை இந்தத் திட்டத்தில் இருந்து முன்கூட்டியே நீங்கள் வெளியேற நினைத்தால் முதல் ஓராண்டிற்கு பணத்தை எடுக்க முடியாது. ஓராண்டிற்கு பின்னரோ, மூன்று ஆண்டிற்கு முன்னரோ கணக்கை முடித்தால் உங்கள் முதலீட்டில் 2% சதவீதம் பிடித்தம் செய்யப்படும். மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் வெளியேற நினைத்தால் 1% பிடித்தம் செய்யப்படும். எவ்வாறாயினும், இந்தத் திட்டத்தில் நாம் பெற்ற வட்டித்தொகையோடு ஒப்பிடும் போது முதலீட்டில் பிடித்தம் செய்யப்படும் தொகை குறைவாகவே இருக்கும்.
இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் மொத்தம் 37,000 ரூபாய் வட்டியாக உங்களுக்கு கிடைக்கும். அதுவே இந்தத் திட்டத்தின் உச்சபட்ச முதலீடான 15 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 5,55,000 ரூபாய் வட்டியாக கிடைக்கும்.
இந்தத் திட்டத்திற்கு வரிவிலக்கு கிடையாது.
மூத்த குடிமக்கள் சேமிப்புத்திட்டம் (Senior Citizen Savings Scheme)
இது 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத்திட்டம்.
ஒருவேளை ஓய்வு பெற்ற அரசு ஊழியராக இருந்தால் 55 வயதுக்குப் பிறகும், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாக இருந்தால் 50 வயதுக்குப் பிறகும் இந்தத் திட்டத்தில் இணையலாம்.
அஞ்சலக சேமிப்புத் திட்டங்களிலேயே இந்தத் திட்டத்திற்குத்தான் அதிக வட்டிதரப்படுகிறது. இதன் வட்டி விகிதம் 8.2% ஆகும்.
குறைந்தபட்சமாக ஆயிரம் ரூபாயும், அதிகபட்சமாக 30 லட்சம்வரையும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். வட்டித்தொகை ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒருமுறை, சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்படும்.
5 ஆண்டுகள் கால அளவு கொண்ட இந்தத் திட்டத்தில் இருந்து முதல் ஆண்டிலேயே வெளியேற நினைத்தால் வட்டி வழங்கப்படாது. ஒருவேளை முந்தைய காலாண்டிற்கான வட்டி, சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்தால் முதலீட்டுத் தொகையில் அந்தப் பணம் பிடித்தம் செய்யப்படும். ஓராண்டிற்கு பின்னரோ, 2 ஆண்டுகளுக்கு முன்னரோ வெளியேற நினைத்தால் முதலீட்டு தொகையில் 1.5% பிடித்தம் செய்யப்படும். அதன் பிறகு கணக்கை முடித்தால் 1% பிடித்தம் செய்யப்படும்.
இந்தத் திட்டத்தில் ஒரு லட்சம் முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் உங்கள் கையில் 1,41,000 ரூபாய் இருக்கும். அதுவே உச்சபட்ச முதலீடான 30 லட்சம் முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் உங்கள் கையில் 42,30,000 ரூபாய் இருக்கும்.
உங்கள் முதலீட்டிற்கான வட்டித்தொகை ஒரு நிதியாண்டில் ரூ.50,000 அதிகமாக இருந்தால் வரிப்பிடித்தம் செய்யப்படும். ஒருவேளை வருமான வரி செலுத்த வேண்டியதைவிட குறைவான வருமானமே ஈட்டக்கூடியவராக நீங்கள் இருந்தால் 15G/15H படிவங்களை முன்கூட்டியே சமர்பித்து இந்த வரிப்பிடித்தத்தை தவிர்க்கலாம்.
மகிளா சம்மான் சேமிப்புத்திட்டம் (mahila samman patra)
இது பெண்களின் சேமிப்பை ஊக்குவிப்பதற்காக அஞ்சல் அலுவலகங்களில் வழங்கப்படும் பிரத்யேக திட்டம்.
இரண்டு ஆண்டுகள் கால அளவு கொண்ட இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு 7.5% வட்டி வழங்கப்படுகிறது.
அஞ்சல் அலுவலகம், வங்கிகளில் உள்ள மற்ற திட்டங்களோடு ஒப்பிட்டால், இந்தத் திட்டம்தான் குறுகிய கால சேமிப்பிற்கு அதிக வட்டி தரக்கூடியது.
குறைந்தபட்சமாக ஆயிரம் ரூபாய் முதல் ரூ.2,00,000 லட்சம்வரை முதலீடு செய்யலாம்.
உதாரணமாக, ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் இரண்டு ஆண்டுகள் முடிவில் உங்கள் கையில் 1,16,022 ரூபாய் இருக்கும். அதுவே, உச்சபட்ச தொகையான இரண்டு லட்சம் முதலீடு செய்தால் இரண்டு ஆண்டுகள் முடிவில் அதன் மதிப்பு 2,32,000 ரூபாயாக இருக்கும்.
இந்தத் திட்டத்திற்கு வரிவிலக்கு கிடையாது.
பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund Account)
பொது வருங்கால வைப்பு நிதி என்பது வளமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கான சிறந்த சேமிப்புத்திட்டம்.
தற்போது இந்தத் திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.1% வட்டி வழங்கப்படுகிறது. மற்ற திட்டங்களில் நீங்கள் சேரும் போது என்ன வட்டிவிகிதம் வழங்கப்பட்டதோ அதே வட்டிவிகிதமே முதிர்வு காலம் முழுமைக்கும் வழங்கப்படும் நிலையில், இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரை மத்திய நிதியமைச்சகம் எடுக்கும் முடிவிற்கு ஏற்ப வட்டிவிகிதம் ஒவ்வொரு காலாண்டிற்கும் மாறுதலுக்கு உட்பட்டது.
15 ஆண்டுகள் கால அளவு கொண்ட இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்த பட்சம் 500 ரூபாய் முதல் அதிகபட்சமாக ரூ.1,50,000 வரை முதலீடு செய்ய முடியும். இந்த முதலீட்டை மொத்தமாகவோ அல்லது சிறிது சிறிதாக உங்கள் வசதிக்கு ஏற்பவோ செய்யலாம்.
ஏதாவது ஒரு நிதியாண்டில் குறைந்த பட்ச முதலீடான 500 ரூபாய் கூட செலுத்தாவிட்டால் உங்கள் கணக்கு இடைநிறுத்தப்படும். பின்னர், முதலீட்டு தொகையையும், ஓராண்டிற்கான அபராதத் தொகையான 50 ரூபாயையும் செலுத்தி கணக்கை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவரலாம்.
ஒருவேளை 15 ஆண்டுகளுக்கு இந்தத் திட்டத்தை உங்களால் தொடர முடியவில்லை என்றால் 5 ஆண்டுகள் கழித்து அதுவரை நீங்கள் செய்துள்ள முதலீட்டில் 50% எடுத்துக்கொள்ளலாம்.
முதலீடு செய்து ஓராண்டைக் கடந்துவிட்டாலே அதிலிருந்து நீங்கள் கடனும் பெற்றுக் கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு. ஒரு நிதியாண்டிற்கு ஒருமுறை மட்டுமே கடன் வழங்கப்படும் நிலையில், கடனை திருப்பிச் செலுத்தாதவரை அடுத்த கடன் வழங்கப்படாது.
பெற்ற கடனை 36 மாதத்திற்குள் திருப்பிச் செலுத்திவிட்டால் ஆண்டுக்கு 1% வட்டி மட்டுமே வசூலிக்கப்படும். தவறும்பட்சத்தில் ஆண்டுக்கு 6% வட்டி வசூலிக்கப்படும்.
இந்தத் திட்டத்தில் கூட்டுவட்டி முறையில் வட்டி கணக்கிடப்படும் என்பதால் நீண்ட கால முதலீட்டுற்கு இது மிகவும் பயன்தரக்கூடிய திட்டம்.
உதாரணமாக ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 15 ஆண்டுகள் கழித்து உங்கள் கையில் 27,12,139 ரூபாய் இருக்கும். அதாவது உங்களுக்கு வட்டியாக மட்டுமே 12,12,139 ரூபாய் கிடைத்திருக்கும்.
இந்த முதலீட்டிற்கு வருமான வரிச்சட்டம் 80சி-ன் கீழ் விலக்கு பெற முடியும் என்பதும், நீங்கள் ஈட்டும் வட்டித்தொகைக்கு வரி செலுத்த தேவையில்லை என்பதும் இந்தத் திட்டத்தின் கூடுதல் சிறப்புகள்.
செல்வ மகள் சேமிப்புத் திட்டம் (Sukanya Samriddhi Yojana)
இது பெண் குழந்தைகளுக்கான சிறப்புத் திட்டம்.
இந்தத் திட்டத்தில் இணைய உங்கள் பெண் குழந்தை 10 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
குறைந்தபட்சமாக ஆண்டுக்கு 250 ரூபாயும், அதிகபட்சமாக ரூ.1,50,000வரையும் செலுத்தலாம்.
இந்தத் திட்டத்திற்கு தற்போது 8% வட்டி வழங்கப்படுகிறது. இது மத்திய நிதியமைச்சகம் எடுக்கும் முடிவிற்கு ஏற்ப ஒவ்வொரு காலாண்டிலும் மாறுதலுக்கு உட்பட்டது.
21 ஆண்டுகள் கால அளவு கொண்ட இந்தத் திட்டத்தில் நீங்கள் 15 ஆண்டுகள் முதலீடு செய்தால் மட்டும் போதும். எனினும், திட்ட முதிர்வின் போது 21 ஆண்டுகளுக்கான வட்டி வழங்கப்படும்.
கணக்குதாரர் இறந்துவிட்டால் அல்லது உயிருக்கு ஆபத்தான ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே இந்தக் கணக்கை முன்கூட்டியே முடிக்க அனுமதிக்கப்படும்.
இந்த திட்டத்திற்கும் வருமான வரிச்சட்டம் 80சி-ன் கீழ் விலக்கு பெற முடியும். அதேபோல ஈட்டும் வட்டித்தொகைக்கு வரி செலுத்த தேவையில்லை.
இந்தத் திட்டமும் கூட்டுவட்டி அளிக்கக் கூடிய திட்டம் என்பதால் ஆண்டுக்கு ஒரு லட்சம் முதலீடு செய்தால் 21 ஆண்டுகள் கழித்து உங்கள் கையில் 44,89,690 ரூபாய் இருக்கும். இதில், 15 ஆண்டுகளுக்கு மட்டுமே நீங்கள் பணம் செலுத்தி இருப்பதால் உங்கள் முதலீட்டு தொகை வெறும் 15 லட்சம் மட்டுமே. ஆனால், உங்களுக்கு கிடைத்திருக்கும் வட்டி 29,89,690 ரூபாய். அதாவது, கிட்டத்தட்ட முதலீட்டு தொகையில் இருமடங்கு உங்களுக்கு வட்டியாக கிடைக்கும்.
பெண் குழந்தை உடையவராக இருந்தால் உங்கள் குழந்தையின் எதிர்கால நலனுக்காக நீங்கள் கட்டாயம் முதலீடு செய்ய வேண்டிய திட்டம் இது.
கிசான் விகாஸ் பத்திரம் (Kisan Vikas Patra)
மக்களிடையே நீண்ட கால முதலீட்டை ஊக்குவிப்பதற்காக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
இது உங்களின் முதலீட்டை இரட்டிப்பாக்க சிறந்த திட்டம்.
இந்தத் திட்டத்தின் கால அளவு 115 மாதங்கள். அதாவது, 9 ஆண்டுகள் 7 மாதங்கள்.
குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்யலாம். அதிகபட்ச வரம்பு கிடையாது.
7.5% கூட்டுவட்டி வழங்கப்படும் இந்தத் திட்டத்தில் ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளைத் தொடங்க முடியும்.
இந்தத் திட்டத்தில் ஒரு லட்சம் முதலீடு செய்தால் திட்ட முதிர்வின் போது உங்கள் கையில் 2 லட்சம் இருக்கும். 10 லட்சம் முதலீடு செய்தால் உங்கள் கையில் 20 லட்சம் இருக்கும். பாதுகாப்பான முறையில் முதலீட்டை இரட்டிப்பாக்கக் கூடிய திட்டம் என்பதால் நீண்ட கால முதலீடு செய்ய விரும்புவர்களுக்கு இது மிகவும் பொருத்தமான திட்டம்.
ஆனால், இதில் செய்யப்படும் முதலீட்டிற்கோ அல்லது இறுதியில் கிடைக்கும் வட்டித்தொகைக்கோ வரிவிலக்கு கிடையாது.
115 மாதங்களுக்கு முன்பாக வெளியேற நினைத்தால் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு கணக்கை முடித்துக்கொள்ளலாம். அதற்கு முன்பாக, கணக்குதாரரின் மரணம் தவிர்த்து மற்ற சந்தர்ப்பங்களில் கணக்கை முடிக்க அனுமதி இல்லை.
தேசிய சேமிப்பு பத்திரம் ( National Savings Certificate)
இது 5 ஆண்டுகள் கால அளவு கொண்ட அனைவருக்குமான திட்டம்.
குறைந்தபட்சமாக ஆயிரம் ரூபாய் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில் அதிகபட்ச வரம்பு கிடையாது.
7.7% கூட்டு வட்டி வழங்கும் இந்தத் திட்டத்தில், ஐந்தாண்டு முடிவில் மொத்தமாக வட்டி வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் வட்டி விகிதம் மாறுதலுக்கு உட்பட்டதல்ல.
கணக்குதாரர் இறந்துவிட்டால் அல்லது கூட்டுக்கணக்கு வைத்திருக்கும் தம்பதியினர் விவாகரத்து பெற்றால் மட்டுமே இந்தத் திட்டத்தில் இருந்து முன்கூட்டியே வெளியேற முடியும்.
உதாரணமாக, இந்தத் திட்டத்தில் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் ஐந்தாண்டுகள் முடிவில் உங்கள் கையில் 1,44,903 ரூபாய் இருக்கும். அதாவது, உங்கள் முதலீட்டு தொகை 40%க்கும் மேலாக அதிகரித்திருக்கும்.
இந்தத் திட்டத்தில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வருமான வரிச்சட்டம் 80சி-ன் கீழ் விலக்கு உண்டு.