சென்னை: வில்லங்க சான்றிதழ் குறித்து, மதுரை ஹைகோர்ட் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறது. என்ன அது?
நிலம், வீட்டு மனை, வீடு போன்ற சொத்துக்களை வாங்க விரும்புபவர்கள் அந்த சொத்தின் முந்தைய ஓனர்கள் குறித்தும், அதில் வில்லங்கம் ஏதேனும் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளவும், வில்லங்க சான்றிதழை பெறுவது வழக்கம். குறிப்பிட்ட அந்த சொத்தின் உரிமையாளர் யார் என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழ் இதுவாகும்.
இதில் அந்த குறிப்பிட்டு சொத்து யார் வசம் இருந்து கைமாறி வந்தது என்ற அனைத்து விவரங்களும் இடம்பெற்றிருக்கும். அந்த சொத்து பதிவுத்துறையில் பத்திரப்பதிவு செய்யப்பட்ட தேதி, பத்திரத்தின் ஆவண எண், உரிமையாளர் பெயர், சொத்தின் வகைப்பாடு, சொத்தின் விஸ்தீர்ணம் (அளவு), சர்வே விவரம் என சகல விவரங்களும் இதில் உள்ளடங்கி இருக்கும்.
அசையா சொத்து: இதன் மூலம் ஒரு சொத்து தொடர்பான வில்லங்கத்தினை முழுமையாக தெரிந்து கொள்ள முடியும். இன்றைய தினம், அசையா சொத்தின் மீது வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனங்களில் கடன் பெறவும் வில்லங்க சான்று தேவையாக இருக்கிறது..
முன்பெல்லாம் இந்த வில்லங்க சான்றினை பெறுவதற்காக, பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டி இருந்தது. ஆனால், இப்போது, ஆன்லைன் மூலமாகவே, வில்லங்க சான்றினை பொதுமக்கள் பெற முடியும்..
இதுகுறித்துதான், முக்கிய உத்தரவு ஒன்றை மதுரை ஹைகோர்ட் பிறப்பித்திருக்கிறது.. மதுரை மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர், சார்-பதிவாளர் அலுவலகத்தில் வில்லங்க சான்றிதழை கோரியிருந்தார்.. ஆனால், பல்வேறு தொழில்நுட்ப காரணங்களை காட்டி, அவருக்கு சான்றிதழ் வழங்கப்படவில்லை.. இதையடுத்து, வில்லங்கச் சான்றிதழ வழங்கும் நடைமுறையில் மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மதுரை ஹைகோர்ட்டில் அந்த பெண் மனு செய்தார்.
பதிவுத்துறை: மனுதாரர் தன்னுடைய தரப்பில் சொன்னதாவது: “பதிவுத்துறை விதிகளின்படி, தனிநபர் பெயரில் வில்லங்கச் சான்று வழங்க வேண்டும். இதை நடைமுறையில் உள்ள மென்பொருள் மூலம் வழங்குவதற்கான வசதி இல்லை என்ற நிலைப்பாட்டை பதிவுத்துறை கூறுகிறது. அந்த நிலைப்பாட்டை எடுக்க முடியாது” என்று கூறப்பட்டது.
இதையடுத்து, தமிழக அரசு தரப்பில் இதுகுறித்து சொல்லும்போது, “வில்லங்க சான்று வழங்குவதற்கான ‘ஸ்டார் 3.0’ மென்பொருள் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார்.. இதையடுத்து நீதிபதி, ”2.0விற்கு பதிலாக ‘3.0’ மென்பொருளாக மாற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை 8 வாரங்களில் முடிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
தொழில்நுட்பம்: சில மாதங்களுக்கு முன்பு, பத்திரப்பதிவில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் வகையில், “ஸ்டார் 3.0” சாப்ட்வேர் தயாரிக்கும் பணிக்கு, சில நாட்களுக்கு முன்பு அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.. இதுதொடர்பாக, பதிவுத் துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி ஒரு அறிக்கையும் வெளியிட்டிருந்தார்.
அதில், “சார் பதிவாளர் அலுவலகங்களில், 1975 முதல் பதிவான பத்திரங்களை ஸ்கேன் செய்து, “ஸ்டார் 3.0” தொகுப்பில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மாவட்ட பதிவாளர் அலுவலகங்களுக்கு அனுப்பி, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள பத்திரங்களை தங்களுக்கு வழங்கப்பட்ட ஸ்கேன் தொகுப்புடன் ஒப்பிட்டு சார் பதிவாளர்கள் சரி பார்க்க வேண்டும். ஏதாவது பத்திரங்கள் விடுபட்டு இருந்தால், அது குறித்து மேலதிகாரிகளுக்கு தெரிவித்து, மறுபடியும் ஸ்கேன் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அறிவுறுத்தல்: நீதிமன்றங்கள், விசாரணை அமைப்புகளுக்கு அனுப்பியவை, சிதிலமடைந்த ஆவண தொகுதிகள், முத்திரையிடப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்ட ஆவண தொகுதிகள் தொடர்பாக, ஏற்கனவே வழங்கப்பட்ட அறிவுரைகளை, சார் பதிவாளர்கள் கடைபிடிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.