
விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அரசு பணியில் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் விளையாட்டு மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகள், திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் சார்பாக ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் பங்கேற்றவர்கள், தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இதற்கு தகுதியானவர்கள். 40 வயதுக்குட்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் இதற்கு தகுதி பெறுவார்கள். சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டின் சார்பாக பங்கேற்று வெற்றி பெற்ற 100 வீரர், வீராங்கனைகளுக்கு 3 சதவிகித விளையாட்டு இட ஒதுக்கீட்டின் கீழ் பணி ஆணை வழங்கப்படும் என அண்மையில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
இந்நிலையில், விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அரசு பணியில் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக அரசு பணிகளில் 3% இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி அதிகாரிகளின் கருத்துகளைக் கேட்டு ஆய்வு நடத்தியுள்ளார் அமைச்சர் உதயநிதி. மேலும், சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்றுள்ளது. இந்த ஆலோசனை கூட்டம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “விளையாட்டு வீரர்களுக்கான 3% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அரசுத்துறை மற்றும் அரசுபொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தலைமைச் செயலாளர் உட்பட அரசு உயர் அதிகாரிகள் – அலுவலர்களுடனான உயர்நிலை ஆய்வுக்கூட்டத்தில் தலைமைச் செயலகத்தில் இன்று பங்கேற்றோம். விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீதம் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி வாய்ப்புக் கோரி விண்ணப்பித்துள்ள நம் விளையாட்டு வீரர்களுக்கு பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை அடையாளங்கண்டு வேலைவாய்ப்பு வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்குமாறு துறைசார்ந்த அதிகாரிகளை வலியுறுத்தினோம். அவர்களின் கருத்துக்களையும் பெற்றோம். விளையாட்டுத்துறையை தேர்வு செய்யும் நம் வீரர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்திட அயராது உழைப்போம்.” எனத் தெரிவித்துள்ளார்.