ஆசிய விளையாட்டு போட்டியின் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் தீபிகா பல்லிகல், ஹரிந்தர் பால் சிங் சாந்து ஜோடி தங்கப்பதக்கம் வென்றது. வில்வித்தையிலும் இந்தியாவுக்கு 2 தங்கப் பதக்கம் கிடைத்தது.
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் தீபிகா பல்லிகல் மற்றும் ஹரிந்தர் பால் சிங் சாந்து ஜோடி, மலேசியாவின் ஐஃபா பின்தி அஸ்மான், முகமது சியாஃபிக் கமால் ஜோடியை எதிர்த்து விளையாடியது.
35 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் தீபிகா பல்லிகல், ஹரிந்தர் பால் சிங் சாந்து ஜோடி 11-10, 11-10 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் வென்றது. இதில் தீபிகா பல்லிகல் தமிழகத்தை சேர்ந்தவர். இவர், பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் மனைவி ஆவார்.
ஸ்குவாஷில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சவுரவ் கோஷல்11-9, 9-11, 5-11, 7-11 என்ற செட் கணக்கில் மலேசியாவின் இயன் யோவிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
வில்வித்தையில் 2 தங்கபதக்கம் வென்றது இந்தியா!
வில்வித்தையில் மகளிருக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவு இறுதிப் போட்டியில் ஜோதிசுரேகா, அதிதி கோபிசந்த், பிரனீத்கவுர் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி, சீன தைபே அணியை 230-229 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.
ஆடவருக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவு இறுதிப் போட்டியில் ஓஜாஸ் பிரவின் டியோடலே, அபிஷேக் வர்மா, பிரதமேஷ் சமதான் ஜாவ்கர் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 235-230 என்ற கணக்கில் தென் கொரியா அணியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.
பேட்மிட்டன்
பேட்மிண்டனில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனோய் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். கால் இறுதி சுற்றில் அவர், 78 நிமிடங்கள் போராடி 21-16, 21-23, 22-20 என்ற செட் கணக்கில் மலேசியாவின் லீ ஸி ஜியாவை வீழ்த்தினார். அரை இறுதிக்கு முன்னேறியதால் குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கம் கைப்பற்றுவதை பிரனோய் உறுதி செய்தார்.
இதன்மூலம் ஆசிய விளையாட்டு போட்டி பாட்மிண்டனில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 41 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கம் வெல்லும் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற உள்ளார்.இதற்கு முன்பு 1982-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் சையதுமோடி வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.
பாட்மிண்டனில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, உலகத்தரவரிசையில் 5-வது இடத்தில்உள்ள சீனாவின் பிங்ஜியாவோவை எதிர்த்து விளையாடினார். 47 நிமிடங்கள் நடந்த இந்தஆட்டத்தில் சிந்து 16-21,12-21என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
கபடி
ஆடவருக்கான கபடியில் 7 முறை சாம்பியனான இந்திய அணி லீக் ஆட்டத்தில் நேற்று சீன தைபேவுடன் மோதியது. இதில்இந்திய அணி 50-27 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிசுற்றுக்கு முன்னேறியது. இதன்மூலம் குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தது
மல்யுத்தம்
மல்யுத்தத்தில் மகளிருக்கான 53 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் அன்டிங் பங்கல் 3-1 என்ற கணக்கில் மங்கோலியாவின் போலோர்துயா பேட்-ஓச்சிரை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார்
மகளிர் ஹாக்கி
மகளிர் ஹாக்கி அரை இறுதியில் இந்திய அணி 0-4 என்ற கோல்கணக்கில் சீனாவிடம் தோல்வி அடைந்தது. இதனால் தங்கப் பதக்கம் வென்று அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கனவு கலைந்தது.