சட்டசபையில் முதல்வர் அறிவித்தப்படி மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய், தேவை உள்ள மகளிர் அனைவருக்கும் வழங்க வேண்டும் – அமைச்சர் கீதா ஜீவன்
திருநங்கைகளுக்கும் மகளிர் உரிமை தொகை வழங்குவது தொடர்பான அறிவிப்பை முதல்வர் விரைவில் அறிவிப்பார் என்று சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் திமுக மகளிர் தொண்டர் அணி சார்பில், கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சமுக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய அமைச்சர் கீதா ஜீவன், மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக 22 திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. திருநங்கைகளும் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பை விரைவில் முதல்வர் அறிவிக்க உள்ளார். அதற்கான கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.
சட்டசபையில் முதல்வர் அறிவித்தப்படி மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய், தேவை உள்ள மகளிர் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். தகுதியுள்ள, தேவையுள்ள அனைவரும் வரும் 18ஆம் தேதி வரை மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறினார்.